குடியரசு திருநாள் விழாவில் கலந்து கொள்ள முடியாத விருதாளர்களுக்கு, விருதுகளை வழங்கி சிறப்பித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: குடியரசு திருநாள் விழாவில் கலந்து கொள்ள இயலாத விருதாளர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார். இன்று (8.3.2022) தலைமைச் செயலகத்தில், குடியரசு திருநாள் விழாவில் கலந்து கொள்ள இயலாத வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம்,

நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது, காந்தியடிகள் காவலர் பதக்கம் ஆகிய பதக்கங்கள், விருதிற்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பதக்கங்களையும், விருதினையும் வழங்கி சிறப்பித்தார்.  

ஒவ்வொரு ஆண்டும் இந்தியக் குடியரசு திருநாள் கொண்டாட்டத்தின் போது, சென்னை, மெரினா கடற்கரையில் தமிழ்நாடு ஆளுநர் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து சிறப்பிப்பார்கள். இவ்விழாவில் வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கம், நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது, மத நல்லிணக்கத்திற்கான கோட்டை அமீர் விருது போன்ற விருதுகளை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கிச் சிறப்பிப்பார்.  

இந்த ஆண்டு நடந்த முடிந்த குடியரசு தின விழாவில், கொரோனா பெருந்தொற்று காரணமாக விழாவில் கலந்து கொள்ள இயலாத  விருதாளர்களான - சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வீ. முத்துகிருஷ்ணன், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த ச. லோகித், கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் கே. அசோகன், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சி. சுதா (எ) பேச்சியம்மாள் ஆகியோருக்கு வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கத்திற்கான சான்றிதழ், தலா 1 இலட்சம் ரூபாய்க்கான காசோலை, பதக்கம் ஆகியவற்றை வழங்கிச் சிறப்பித்தார்.     

மேலும், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த செ. ராமசாமி அவர்களுக்கு சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருதிற்கான 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பதக்கம் ஆகியவற்றையும்;

வேலூர் மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் மா. குமார் அவர்களுக்கும், திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் ச. சிதம்பரம் ஆகியோருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கத்திற்கான சான்றிதழ் மற்றும் தலா 40 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பதக்கங்களையும் முதலமைச்சர் வழங்கினார்.

Related Stories: