பார்களை மூட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் மேல் முறையீடு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை

சென்னை: தமிழகம் முழுவதும், டாஸ்மாக் சில்லறை மதுபான கடைகளின் அருகில் உள்ள பார்களில் தின்பண்டங்கள் விற்பனை மற்றும் காலி பாட்டில்களை சேகரிப்பதற்கு புது டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டது.

கொரோனா ஊரடங்கால் பார்கள் மூடப்பட்டுள்ளதால், புதிய டெண்டருக்கு பதிலாக பழைய டெண்டர் நீட்டிக்க வேண்டும், நில உரிமையாளர்களின் தடையில்லா சான்றை கட்டாயப்படுத்தக் கூடாது போன்ற கோரிக்கைகளுடன் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.  இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி சி.சரவணன் அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், தமிழ்நாடு மதுவிலக்கு சட்டப்படி பார் நடத்த டாஸ்மாக்குக்கு அதிகாரம் இல்லாததால், தமிழகம் முழுவதும்  டாஸ்மாக் கடைகளை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள பார்களை 6 மாதங்களுக்குள் மூட வேண்டும்.

கடைகளில் வாங்கும் மதுபானங்களை வீடுகளிலோ அல்லது தனியான இடங்களிலோ அருந்தலாம் என்றும் உத்தரவில் தெரிவித்திருந்தார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.  அதில், தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் படி டாஸ்மாக் கடைகளின் அருகில் பார்களுக்கு உரிமம் வழங்க டாஸ்மாக் நிறுவனத்துக்கு அதிகாரம் உள்ளது. பார்கள் நடத்த டாஸ்மாக் நிறுவனத்துக்கு அதிகாரமில்லை என தனி நீதிபதி மேற்கோள்காட்டிய மதுவிலக்கு சட்டப்பிரிவு பார் உரிமம் வழங்கும் விஷயத்துக்கு பொருந்தாது.

டாஸ்மாக் பார் டெண்டரை எதிர்த்துதான் வழக்கு தொடரப்பட்டதே தவிர டாஸ்மாக் கடைகள் அருகில் பார் அமைக்க கூடாது என்று எந்த வாதங்களும் முன் வைக்கப்படவில்லை. இந்த நிலையில், பார்களை மூட வேண்டும் என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு தேவையற்றது.  எனவே, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.இந்த மேல் முறையீட்டு வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Related Stories: