விமானப்படை மூலம் இந்தியர்களை மீட்கும் ‘ஆபரேஷன் கங்கா’ திட்டம் நிறுத்தம்: கார்கிவ், சுமியில் சிக்கிய 1000 பேரின் கதி என்ன?

உக்ரைனில் சிக்கிய மாணவர்கள், இந்தியர்கள் உட்பட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரையில் சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளனர். இதில், ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின் மூலம், விமானப்படை விமானங்களால் 13,700 பேர் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று மேலும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அழைத்து வரப்பட்டனர். இன்று மேலும் 2,200 பேரை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், விமானப்படை விமானங்களின் மூலம் இந்தியர்களை மீட்கும், ‘ஆபரேஷன் கங்கா’ திட்டம், நேற்றுடன் நிறுத்தப்பட்டது. இன்று அழைத்து வரப்படும் இந்தியர்கள், தனியார் விமானங்கள் மூலம் வருவார்கள் என்று தெரிகிறது.

இந்நிலையில், உக்ரைனில் உள்ள எஞ்சிய இந்தியர்கள், மாணவர்களை அண்டை நாடுகளின் நகரங்களுக்கு வரும்படி வெளியுறவு அமைச்சகம் நேற்று கேட்டுக் கொண்டது. மேலும், விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், `உக்ரைனில் இருந்து நாளை (இன்று) புடாபெஸ்ட் (5), சுசீவா (2), புகாரெஸ்ட் (1) ஆகிய வழித்தடங்களில் மொத்தம் 8 சிறப்பு விமானங்களின் மூலம் 1,500 இந்தியர்கள் தாய்நாடு அழைத்து வரப்பட உள்ளனர். ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் 11 விமானங்களின் மூலம் 2,135 பேர் இன்று (நேற்று) அழைத்து வரப்பட்டனர்.

ஏர் இந்தியா விமானம் மூலம் இதுவரை 2,056 பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர்,’ என்று கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில், கார்கிவ், சுமி நகரங்களில் மாணவர்கள் உட்பட ஆயிரம் இந்தியர்கள் சிக்கியுள்ளனர். இந்த நகரங்களில் ரஷ்யா - உக்ரைன் படைகள் இடையே கடும் சண்டை நடந்து வருவதால், இவர்களால் வெளியேற முடியவில்லை. அங்கேயே சிக்கியுள்ளனர். மீறி வெளியே வந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இவர்களை மீட்பதற்கு தற்காலிக போர் நிறுத்தம் செய்யும்படி இருநாடுகளையும் இந்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

Related Stories: