சென்னையில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு டிஜிபி சைலேந்திரபாபு சைக்கிள் பயணம்

சென்னை: சென்னையில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு டிஜிபி சைசேந்திரபாபு சைக்கிள் பயணம் மேற்கொண்டார். தமிழக சட்டம் - ஒழுங்கு போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு நேற்று காலை உடற்பயிற்சிக்காக சென்னையிலிருந்து சைக்கிளில் புறப்பட்டு பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர் வழியாக இருங்காட்டுக்கோட்டை சென்றார். தொடர்ந்து இருங்காட்டுக்கோட்டையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை துவக்கி வைத்தார். பின்னர், இருங்காட்டுக் கோட்டையிலிருந்து திருமழிசை, வெள்ளவேடு, அரண்வாயல் வழியாக மணவாளநகர் வரை சைக்கிளில் வந்தார். பின்னர் மீண்டும் சென்னைக்கு புறப்பட்டார். அப்போது புதுச்சத்திரம் அருகே சாலையோரம் உள்ள கடையில் கரும்பு ஜூஸ் வாங்கி குடித்தார்.

அப்போது, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: தமிழ்நாடு காவல்துறை சைக்கிள் வீரர்களுடன் ஞாயிற்றுக்கிழமைகளில் 100 கிலோமீட்டர் தொலைவிற்கு சைக்கிளிங் செய்து வருகிறேன். உடற்பயிற்சி செய்வதன் மூலம் அலுவலக பணிகளை கடுமையாக மேற்கொள்ள முடிகிறது. எனவே 4 மணி நேரம் சைக்கிளிங் செய்வது அடுத்த 12 மணி நேரத்திற்கு கடுமையாக உழைப்பதற்கு உபயோகமாக இருக்கிறது. மேலும் சாலையோரங்களில் உள்ள கரும்பு உள்ளிட்ட இயற்கை உணவுகளை சாப்பிடுவது உடல் நலத்திற்கு நன்மை அளிக்கிறது. தற்போது இளைய தலைமுறையினர் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். செய்தித்தாள் வாசிப்பது மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் பிற்காலத்தில் காவல்துறையில் பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: