கண்ணை மூடிக் கொண்டு அமைதியாக இருக்காதீர்... உக்ரைன் வீழ்ந்தால் ஐரோப்பாவும் வீழும்: அதிபரின் ஆக்ரோஷமான உரையால் மக்கள் ஆரவாரம்

பிராக்: கண்ணை மூடிக் கொண்டு அமைதியாக இருக்காதீர்; உக்ரைன் வீழ்ந்தால் ஐரோப்பாவும் வீழும் என்று உக்ரைன் அதிபர் பேசியதை ஆயிரக்கணக்கான மக்கள் கேட்டனர். உக்ரைன் - ரஷ்யா போர் பத்தாவது நாளை எட்டியுள்ள நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி உலகின் பலநாடுகளின் ஆதரவை பெற்றுள்ளார். இந்நிலையில் அவர் பிராக் நாட்டின் வென்செஸ்லாஸ் சதுக்கத்தில் காணொலி மூலம் ஆற்றிய உரையில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். அவரது பேச்சை கேட்க உக்ரைன் கொடியுடன் மக்கள் ஆரவாரம் செய்தனர்.

அங்குள்ள கட்டிடங்கள் நீலம் மற்றும் மஞ்சள் நிறத்தில் ஒளிர்ந்தன. அப்போது உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி பேசுகையில், ‘உக்ரைன் வீழ்ந்தால், ஐரோப்பாவும் வீழும். நடங்கும் சம்பவங்களை பார்த்து அமைதியாக இருக்காதீர்கள்; இதைப் பார்த்துக் கொண்டு கண்மூடித்தனமாக இருக்காதீர்கள். உக்ரைன் போரில் நாங்கள் வெற்றி பெற்றால், அது ஜனநாயக உலகிற்கு கிடைத்த வெற்றியாகும். நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அவ்வாறு பெறுகின்ற வெற்றியானது நமது சுதந்திரத்திற்கான வெற்றியாக இருக்கும்.

இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றியாகவும், அடிமைத்தனத்தில் இருந்து மீண்டு எழுகின்ற சுதந்திரத்தின் வெற்றியாகவும் இருக்கும். நாட்டைக் காக்கும் வீரர்களை போற்றுகிறேன். தங்கள் உயிரைக் கொடுத்த அவர்களை நினைவு கூர்கிறேன். போர் களத்தில் உள்ள அவர்கள் தான் உங்களது ஐரோப்பாவைப் பாதுகாக்கிறார்கள்; எங்களது இதயம் உக்ரைனின் இதயம்; தீமைக்கு எதிராக ஒன்றாக எழுந்து நிற்கிறது’ என்று உருக்கமாக ஜெலென்ஸ்கி பேசினார். முன்னதாக போரில் இறந்த வீரர்களுக்கு ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இவர் பேசிய உரையானது பிராட்டிஸ்லாவா, ஃபிராங்க்ஃபர்ட், ப்ராக், லியோன், திபிலிசி, வியன்னா, வில்னியஸ் உட்பட ஐரோப்பா நாடுகள் முழுவதும் உள்ள நகரங்களுக்கு ஜூம் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. முன்னதாக, உக்ரைன் அதிபர் தலைமையில் ஜார்ஜியாவின்  திபிலிசியில் பேரணி நடைபெற்றது. அப்போது ஜெலென்ஸ்கி தனது முஷ்டியை உயர்த்தி காட்டி பேசினார். உக்ரைன் கொடிகளை ஏந்தியபடி ஆயிரக்கணக்கான மக்கள் ஆரவாரம் செய்தனர்.

Related Stories: