பூண்டி, புழல் ஏரிகளின் உபரிநீர் செல்லும் கொசஸ்தலை ஆற்றில் சிறப்பு ஆலோசனை குழு ஆய்வு: கரைகளை பலப்படுத்த முடிவு

திருவொற்றியூர்: பூண்டி மற்றும் புழல் ஏரிகளின் உபரிநீர் செல்லும் கொசஸ்தலை ஆறு மற்றும் கால்வாயை தமிழக அரசின் சிறப்பு ஆலோசனை குழுவினர் ஆய்வு செய்தனர்.

சென்னை மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி மற்றும் புழல் ஏரிகள் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் நிரம்பினால், அவற்றில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவது வழக்கம். அதன்படி, பூண்டி ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் கொசஸ்தலை ஆறு வழியாகவும், புழல் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் கால்வாய் வழியாகவும் கடலில் கலக்கிறது.

 

இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழையால் புழல் மற்றும் பூண்டி ஏரி நிரம்பியதால், இவற்றில் இருந்து   படிப்படியாக உபரிநீர் திறந்து விடப்பட்டது. அவ்வாறு பூண்டி ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர், கொசஸ்தலை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடியதால், சோழவரம்  அருகே வெள்ளிவாயல் கிராமம் பகுதியில் ஆற்றின் கரை உடைந்து, ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் வெள்ளிவாயல், விச்சூர், கணபதி நகர் லட்சுமி நகர் மணலி புதுநகர் அருகே உள்ள வடிவுடையம்மன் நகர், சடையங்குப்பம், இருளர் காலனி உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டதால், அங்கு வசித்து வந்த மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் மேற்கண்ட பகுதிகளை அடுத்தடுத்து 2 முறை பார்வையிட்டு உபரிநீரை அகற்றவும், நிவாரண  பணிகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும்,  இனிவரும் காலங்களில் உபரிநீர் குடியிருப்புகளை சூழ்ந்து  விடாமல் இருக்க கொசஸ்தலை ஆறு மற்றும் ஏரி உபரிநீர் கால்வாயை தூர்வாரி, கரைகள் பலப்படுத்தி சீரமைக்கப்படும் என்றும், இந்த பணிகளை மேற்கொள்ள ஒரு குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.   அதன்படி, கொசஸ்தலை ஆற்றில், கரைகள் வலுவிழந்த பகுதிகள் கண்டறியப்பட்டு, தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. தொடர்ந்து  ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் சிறப்பு ஆலோசனை குழு அமைக்கப்பட்டது.

இந்த ஆய்வுக்குழு நேற்று  பூண்டி ஏரியில் இருந்து எண்ணூர் வரை செல்லும் கொசஸ்தலை ஆற்றின் கரை மற்றும் புழல் ஏரி உபரிநீர் செல்லக்கூடிய ஆமுல்லைவாயல் மற்றும் இருளர் காலனி  கால்வாய் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு  செய்தனர். அப்போது, இனிவரும் காலங்களில் கனமழை பெய்தால் உபரி நீர் குடியிருப்புகளுக்குள் புகும் அபாயம் ஏற்படுமா என்பது குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் அடிப்படையில் கொசஸ்தலை  ஆறு மற்றும் புழல் ஏரி உபரிநீர் கால்வாய் கரைகளை நிரந்தரமாக சீரமைக்க திட்ட வரைவு தயாரிக்கப்படும் என்று தெரிவித்தனர். ஆய்வின்போது, பொதுப்பணித்துறை மாவட்ட செயற்பொறியாளர்  திலகம், உதவி பொறியாளர் சதீஷ்குமார், கமிட்டி உறுப்பினர் பாலாஜி உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.   

Related Stories: