ஒன்றிய அரசு திரைப்பட தொழிலுக்கு உதவும் நடவடிக்கையை எடுக்கும்: ஒன்றிய தகவல் ஒலிபரப்புத்துறை செயலாளர் அபூர்வ சந்திரா அறிவிப்பு

சென்னை: திரைப்பட தொழிலுக்கு உதவக் கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு எடுக்கும் என ஒன்றிய தகவல் ஒலிபரப்புத்துறை செயலாளர் அபூர்வ சந்திரா தெரிவித்தார். ஒளிப்பதிவுச் சட்டம்-1952ல் செய்யப்பட உள்ள திருத்தங்கள் மற்றும் திரைப்படத்துறை சார்ந்த பிற பிரச்னைகள் குறித்து திரைப்பட துறை சங்கங்களின் பிரதிநிதிகளுடன்  காணொலி வாயிலாக ஒன்றிய தகவல் ஒலிபரப்பு துறை செயலாளர் அபூர்வ சந்திரா உரையாற்றினார். சென்னையில் நடந்த கூட்டத்தில் தென்னிந்திய திரைப்படத் துறை சார்ந்த பிரதிநிதிகளுடன் அவர் கலந்துரையாடினார். அவர் பேசியதாவது:திரைப்படத்துறை செழித்து விளங்குவதை உறுதி செய்யவும், இந்திய திரைப்படங்கள், சர்வதேச அளவில் சென்றடைவதை உறுதி செய்யவும் இதுபோன்ற கலந்துரையாடல்கள் நடத்தப்படுகின்றன. திரைப்படத்துறையின் மேம்பாட்டிற்காக ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே, திரைப்படத்துறை சார்ந்த பல்வேறு பிரிவுகளை தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்துடன் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளது. ஒளிப்பட சட்டத்திருத்த வரைவு மசோதாவில் இடம்பெற உள்ள அம்சங்கள் மற்றும் திருட்டு வீடியோ பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான அம்சங்களுக்கு, திரைப்படத்துறையை சேர்ந்தவர்களுடன் ஆலோசனை நடத்தி தீர்வு காணப்படும் என்றார்.

மேலும், நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த ஒன்றிய தகவல் ஒலிபரப்பு அமைச்சக கூடுதல் செயலாளர் நீர்ஜா சேகர், தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் எடுத்து வரும் பல்வேறு முன் முயற்சிகள்  குறித்து திரைப்படத்துறையினருடன் விவாதித்தார்.இந்த கலந்துரையாடலில் ஒன்றிய திரைப்பட சான்றளிப்பு வாரியத்தின் சான்றிதழ் பெறுவதில் உள்ள சிக்கல்கள், திரை அடர்த்தி விவகாரங்கள், விலங்குகள் நல வாரியத்தின் அனுமதி மற்றும் படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்களுக்கு அனுமதி பெறுவதில் உள்ள பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில், தென்னிந்திய திரைப்பட தொழில்துறையைச் சேர்ந்த சுமார் 50 பிரதிநிதிகள் பங்கேற்றனர். ஒன்றிய திரைப்பட தணிக்கை வாரிய தலைவர் பிரசூன் ஜோஷி, தலைமைச் செயல் அதிகாரி ரவீந்தர் பாக்கர், தேசிய திரைப்பட ஆவண காப்பக இயக்குனர் பிரகாஷ் மகதம், ஒன்றிய தகவல் ஒலிபரப்பு அமைச்சக இயக்குனர் (திரைப்படங்கள்) தன்ப்ரீத் கவுர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: