அடிப்படை வசதிகளில் உடனடி கவனம் தேவை: உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள்

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: நகர்ப்புற உள்ளாட்சிக்கு நேரடித் தேர்தலில் வெற்றிபெற்று உறுப்பினர்களாக பதவியேற்றவர்கள் மற்றும் மறைமுகத் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்ற மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சித் தலைவர்கள், துணைத்தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள் ஆகிய அனைவருக்கும் த.மா.கா சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நகர்ப்புற உள்ளாட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அனைவரும் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிவாழ் மக்களின் வளர்ச்சிக்கு உள்ளாட்சியின் அதிகாரத்துக்குட்பட்டு பணியாற்றி மாநில வளர்ச்சிக்கு உதவிட வேண்டும்.

குறிப்பாக தான் எந்த கட்சியை சார்ந்தவராக இருந்தாலும், சுயேச்சையாக இருந்தாலும் அதற்கு அப்பாற்பட்டு பொதுவானவர்களாக, அனைத்து தரப்பு மக்களுக்குமான பணியை மேற்கொள்ள வேண்டும். மாநிலம் முழுவதும் அந்தந்த பகுதியில் அடிப்படை மற்றும் அவசியத் தேவையான குடிநீர் வழங்கல், தெரு சுத்தம், கழிவுநீர் செல்லும் பாதை பராமரிப்பு, மின்கம்பம், விளக்கு பொருத்துதல், குப்பை அகற்றுதல், மழைநீர், கழிவுநீர் தேக்கமடையால் செல்லுதல் ஆகியவற்றில் உடனடிக்கவனம் செலுத்த வேண்டும். இனிவரும் மழை, வெயில் என எக்காலத்திலும் மாநிலத்தின் உள்ளாட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு, வெள்ள நீர், மழை நீர் தேக்கம், ஆக்கிரமிப்பு ஆகியவற்றிற்கு இடம் கொடுக்காத வகையில் பணி நடைபெற வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: