பவானி கோயிலில் பொங்கல் விழா : உடலில் சேறுபூசி பக்தர்கள் வழிபாடு

பவானி: பவானி செல்லியாண்டியம்மன் கோயில் பொங்கல் விழாவையொட்டி பக்தர்கள் உடலில் சேறு, வண்ணப்பொடிகள் பூசியும், பல்வேறு வேடங்கள் அணிந்தும் வழிபாடு செய்தனர். ஈரோடு மாவட்டம், பவானியின் காவல் தெய்வமான செல்லியாண்டி அம்மன், மாரியம்மன், எல்லையம்மன் வகையறா கோயில்களில் மாசி  பொங்கல் திருவிழா கடந்த மாதம் 15ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 22ம் தேதி இரவு கம்பம் நடப்பட்டது. தொடர்ந்து, கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபாடு செய்யப்பட்டது. விழாவை முன்னிட்டு கோயில் கருவறைக்கு சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்யும் அம்மன் நீராட்டு, நேற்று முன்தினம் அதிகாலை தொடங்கி விடிய, விடிய நடைபெற்றது. பக்தர்கள் பால், மஞ்சள் நீரை ஊற்றி வழிபாடு செய்தனர். இதனைத் தொடர்ந்து, பவானி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள எல்லையம்மன் கோயிலில் இருந்து படைக்கலனுடன் அலங்கரிக்கப்பட்ட குதிரையில் அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அப்போது, ஏராளமான பக்தர்கள் ஒருவருக்கொருவர் சேற்றினைப் பூசிக் கொண்டனர்.

மேலும், வண்ணப் பொடிகளை உடலில் பூசியும், காய்கறிகளால் அலங்காரம் செய்து ஊர்வலமாக வந்தனர். அப்போது, சாலையோரம் நின்றிருந்த வியாபாரிகள் மற்றும் பக்தர்கள் உப்பு, மிளகு, காய்கறிகள், பழவகைகள், துணிகள் மற்றும் சில்லறை காசுகளை வீசினர்.

இவ்வாறு செய்வதால் வியாபாரம் பெருகும் என்பது நம்பிக்கை. ஊர்வலம் கோயிலை சென்றடைந்ததும் பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு வழிபாடு செய்தனர். மேலும், பக்தர்கள் அலகு குத்தியும், அக்னிசட்டி ஏந்தி ஊர்வலமாக வந்து வழிபாடு நடத்தினர். பவானி டிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இன்று காலை 9 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். 6ம் தேதி மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.

Related Stories: