மகா சிவராத்திரியை முன்னிட்டு திருச்செந்தூர் கடற்கரை மணலில் சிவலிங்கம் பிரதிஷ்டை

திருச்செந்தூர்: மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் கடற்கரையில் சிவபக்தர்கள் மணலில் சிவலிங்கத்தை வடிவமைத்து பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். அறுபடை வீடுகளில் 2ம் படை வீடாகத் திகழும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து வேண்டுதலுடன் தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தி வருகின்றனர். அதிலும் வைகாசி விசாகத் திருவிழா, கந்த சஷ்டி திருவிழா உள்ளிட்ட பல்வேறு விழாக்காலங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்கள் மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாகப் பங்கேற்பர்.

இதே போல் ஆண்டு தோறும் சிவராத்திரி பண்டிகையை முன்னிட்டு இக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. பொதுவாக ஆண்டுதோறும் மாசி மாதம் அமாவாசைக்கு முதல்நாள் மகா சிவராத்திரி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி சிவாலயங்களில் சிவராத்திரி அன்று இரவு முழுவதும் 4 கால சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். இதற்காக சிவ பக்தர்கள் விரதம் மேற்கொண்டு இரவு முழுவதும் சிவன் கோயில்களில் கண்விழித்து நமசிவாய என்ற பஞ்சாட்சர மந்திரத்தை முழங்கியவாறு தியானித்து வழிபடுவர்.

இதே போல் சிவனே குரு பகவானாக அமர்ந்த போற்றுதலுக்குரிய திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலிலும் இந்த ஆண்டு சிவராத்திரி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சிவராத்திரியை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நேற்று வருகை தந்த சிவன் அடியார் உள்ளிட்ட பக்தர்கள் இங்குள்ள கடற்கரை மணலில் சிவனின் வடிவமான சிவலிங்கத்தை தத்ரூபமாக மணலில் வடிவமைத்து பிரதிஷ்டை செய்தனர். தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடத்தி வழிபட்டனர்.

Related Stories: