மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு ராமேஸ்வரம் கோயிலில் தேரோட்டம்

ராமேஸ்வரம்: மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு ராமேஸ்வரம் கோயிலில் இன்று காலை சுவாமி-அம்பாள் தேரோட்டம் நடைபெற்றது. சுவாமி சன்னதியில் தொடர்ந்து அபிஷேகம், ஆராதனை நடந்தது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழாவின் ஒன்பதாம் திருநாளான இன்று காலை தேரோட்டம் நடந்தது. இதையொட்டி இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 5.30 மணிக்கு ஸ்படிகலிங்க பூஜை நடைபெற்றது. பின் ராமநாதசுவாமி-பர்வதவர்த்தனி அம்பாள் சன்னதியில் காலபூஜையும், கங்கை அபிஷேகமும் நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் சர்வ அலங்காரத்தில் திருத்தேர்களில் எழுந்தருள சிறப்பு தீபாராதனைக்கு பின் தேரோட்டம் துவங்கியது.

கோயில் இணை கமிஷனர் பழனிக்குமார் தேரின் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைக்க ஏராளமான பக்தர்கள் தேர்களை ரத வீதியில் இழுத்து வந்தனர். விநாயகர், முருகன் எழுந்தருளிய தேர்கள் முன்பு செல்ல ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் நான்கு ரத வீதியில் தேர்களில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பகல் 10 மணிக்கு மேல் தேர்கள் நிலைக்கு வந்தவுடன் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Related Stories: