சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மூலம் மீட்கப்பட்ட சிலைகளை கொண்டு சென்னை ஐஐடியுடன் இணைந்து ‘மெய் நிகர் அருங்காட்சியகம்’: இணையதளம் மூலம் பொதுமக்கள் ‘3டி’ வடிவிலும் பார்க்கலாம்

சென்னை: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மூலம் மீட்கப்பட்ட சிலைகளை கொண்டு சென்னை ஐஐடி உதவியுடன் ‘மெய்நிகர் அருங்காட்சியகம்’ அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தை பொதுமக்கள் இணையதளம் மூலம் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக கோயில்களில் இருந்து திருடப்பட்ட சிலைகள், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மூலம் 374 சிலைகள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சிலைகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு மீண்டும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 36 உலோக சிலைகள், 265 கற்சிலைகள் மற்றும் 73 மரச்சிலைகள் என மொத்தம் 374 சிலைகள் அடங்கும்.

இந்த சிலைகளை பாதுகாக்கும் வகையில் திருவொற்றியூரில் உள்ள தியாகராஜ சுவாமி மற்றும் வடிவுடையம்மன் கோயிலில் உள்ள சிலை பாதுகாப்பு மையத்தில் பல கோடி மதிப்புள்ள 36 உலோக சிலைகள், 72 மரத்தாலான சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும், 265 கற்சிலைகள் எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள 374 சிலைகளையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சென்னை ஐஐடி உதவியுடன் அனைத்து சிலைகளையும் பல கோணங்களில் ‘3டி’ படங்களாக எடுத்துள்ளனர். பின்னர் அந்த புகைப்படங்கள் அனைத்தும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் சென்னை ஐஐடி உதவியுடன் மெய்நிகர் மற்றும் மேம்பட்ட மெய் நுணுக்க முறையில் ‘மெய்நிகர் அருங்காட்சியகம்’ உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அருங்காட்சியகத்தை பொதுமக்கள் மின்னணு ஊடகம் வழியாக பார்க்கலாம். இந்த அருங்காட்சியகம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சென்னை ஐஐடி பேராசிரியர்களான மணிவண்ணன், சங்கர நாராயணன் மற்றும் இன்வென்ட் சாப்ட்லேப் பிரேம்நாத் ஆகியோருடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் பழமைவாய்ந்த 108 சிலைகளின் புகைப்படங்கள் முப்பரிமாணமாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள சிலைகளின் படங்கள் விரைவில் இந்த அருங்காட்சியகத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர நுண்திறனை செயல்படுத்தி எது போலியான சிலை, எது உண்மையான சிலை என்பதை அதிநவீன தொழில் நுட்பம் மூலம் கண்டறியலாம். பொதுமக்கள், கலை மற்றும் கலாச்சார நிபுணர்கள் மெய் நிகர் அருங்காட்சியகத்தை பார்க்க www.tnidols.com என்ற இணையதளத்தின் மூலம் பார்க்கலாம் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: