காட்டுத்தீ ஏற்படுவதை தடுக்க முதுமலை புலிகள் காப்பகத்தில் ‘கவுன்டர் பயர்’- வனத்தை காக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை

ஊட்டி: முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில் ‘கவுன்டர் பயர்’ முறையில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி 2மாதங்கள் தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் மாதம் துவங்கி 2 மாதங்கள் வட கிழக்கு பருவமழையும் பெய்வது வழக்கம். இந்த இரண்டு பருவமழையும் குறித்த சமயத்தில் பெய்தால், ஆண்டு முழுக்க அனைத்து  நீரோடைகள், ஆறுகள் மற்றும் குளங்களில் தண்ணீர் இருக்கும். வனங்களும்  பசுமையாக காட்சியளிக்கும்.

அதேசமயம், நவம்பர் மாதம் துவங்கி 4 மாதங்கள் பனி பொழிவு காணப்படும். இச்சமயங்களில் வனங்களில் உள்ள புற்கள்,  செடி, கொடிகள் மற்றும் மரங்கள் கூட காய்ந்து போய்விடும். குறிப்பாக, மித வெப்ப பகுதியான முதுமலை புலிகள் காப்பகம், பந்திப்பூர் புலிகள் காப்பகம் போன்ற பகுதிகள் வறட்சி ஏற்படும். வனங்களில் பசுமை என்பதே துளியும் இல்லாமல்  போய்விடும். இந்த முறையும் பனி பொழிவு காரணமாக புற்கள், செடி கொடிகள் காய்ந்து போயுள்ளன. மரங்களில் கூட இலைகள் இல்லாமல் காணப்படுகிறது.

இதனால், யானை, புலி, காட்டெருமை போன்ற விலங்குகள் நீர் நிலைகளை தேடி சென்றுவிட்டன. தற்போது வனங்கள் காய்ந்துள்ள நிலையில், காட்டுத்தீ ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், முதுமலை மற்றும் பந்திப்பூர் புலிகள் காப்பகம் செல்லும் சுற்றுலா பயணிகள் மசினகுடி, தெப்பாக்காடு வழியாக செல்கின்றனர். அதேபோல், கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் இந்த வழித்தடத்தையே பயன்படுத்துகின்றனர். முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் வனங்கள் காய்ந்து போயுள்ளன.

சுற்றுலா பயணிகள் சிகரெட் குடித்துவிட்டு சாலையோரங்களில்  எறிந்தால் கூட வனங்கள் தீ பற்றிக் கொள்ளும் அபாயம் நீடிக்கிறது. இதனால் காட்டுத்தீ ஏற்படாமல் தடுக்க வனங்களில் தீத்தடுப்பு கோடுகள்  அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. முதுமலை புலிகள் காப்பத்திற்குட்பட்ட பகுதிகளிலும் தற்போது தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் நிலையில், சுற்றுலா பயணிகள் வாகனங்கள்  மற்றும் ஏராளமான சரக்கு வாகனங்கள் வந்துச் செல்லும், முதுமலை - மைசூர்  சாலை, மசினகுடி - தெப்பக்காடு சாலையின் இரு புறங்களிலும் தீத்தடுப்பு  கோடுகள் 10 மீட்டருக்கு அமைக்கப்பட்டு வருகிறது.

‘கவுன்டர் பயர்’  முறையில் சாலையில் இருந்து 10 மீட்டர் தொலைவிற்கு உள்ள செடி கொடிகள் மற்றும் புற்கள் ஆகியவை சேகரித்து தீ மூட்டப்பட்டு, பின் அவைகள் எரிந்து முடிந்தவுடன் தீ பராவாமல் இருக்க உடனடியாக அணைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியில் தற்போது 10க்கும் மேற்பட்ட தீத்தடுப்பு காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். மசினகுடியில் இருந்து முதுமலை வரை கவுன்டர் பயர் வைத்து தீத்தடுப்பு அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. மேலும், தமிழக எல்லை வரை இப்பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும், இதன் மூலம் காட்டுத்தீ ஏற்படுவதை தவிர்க்க முடியும் எனவும் வனத்துறையினர்  தெரிவித்தனர்.

Related Stories: