கவர்னர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்: உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க திட்டம்?

சென்னை: தமிழக  கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவை காக்கும் வகையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13ம் தேதி நீட் தேர்விற்கு எதிராக புதிய மசோதா சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது. பின்னர், இந்த மசோதா கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பாமல் கவர்னர் காலம் தாழ்த்தி வந்தார். இந்தநிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து நீட் தேர்விற்கு விலக்கு அளிக்கும் மசோதாவை உடனடியாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால், மசோதா ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தப்பட்டு வந்தது.

இந்தநிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாவை 2ம் தேதி கவர்னர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார். 4 மாதஙம காலம் தாழ்த்தி மசோதாவை மீண்டும் அரசுக்கே கவர்னர் திருப்பி அனுப்பியதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து, கடந்த 8ம் தேதி சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானம் மீண்டும் கவர்னர் ஆர்.என்.ரவியிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக, சட்டப்பேரவை கூட்டம் நடப்பதற்கு முன்னதாக, கவர்னர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக கடந்த 7ம் தேதி டெல்லி செல்ல இருந்தார். ஆனால், அந்த பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இந்தநிலையில், கவர்னர் நேற்று காலை சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். அவர், இன்று அல்லது நாளை உள்துறை அமைச்சர் அமித்ஷா உட்பட முக்கிய தலைவர்களை சந்திக்க இருப்பதாக தெரிகிறது.

Related Stories: