ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் இந்தியா, சீனா, யுஏஇ நாடுகள் வாக்களிக்காமல் புறக்கணிப்பு: வீட்டோ அதிகாரத்தால் முறியடித்தது ரஷ்யா

ஐநா: உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை கண்டிக்கும் வகையிலும் அந்நாட்டை தனிமைப்படுத்தவும், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, அல்பேனியா சார்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட 67 ஐநா உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்தது. இதில், பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக உள்ள அமெரிக்க, சீனா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய 5 நாடுகளும் இந்தியா உள்ளிட்ட 10 உறுப்பு நாடுகளும் வாக்களிக்க முடியும். உலகளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக அமெரிக்கா, நார்வே, இங்கிலாந்து உட்பட 11 நாடுகள் வாக்களித்தன. இந்தியா, சீனா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் வாக்களிக்காமல் புறக்கணித்தன. நிரந்தர உறுப்பினராகவும், பிப்ரவரி மாதத்திற்கான பாதுகாப்பு கவுன்சிலின் தலைவராகவும் உள்ள ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இந்த தீர்மானத்தை தோல்வி அடையச் செய்தது.

ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ் கிரீன்பீல்ட் கூறுகையில், ‘‘கவுன்சிலில் வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்தவர்களும், வாக்களிப்பை புறக்கணித்தவர்களும் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை ஆதரிப்பவர்கள் ஆவர். நாங்கள் இந்த விஷயத்தை ஐநா பொதுச் சபைக்கு எடுத்துச் செல்வோம், அங்கு ரஷ்யாவின் வீட்டோ அதிகாரம் பொருந்தாது,’’ என்றார். இந்த வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்ததற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன ‘ரஷ்யா நமது நட்பு நாடாக இருந்தாலும், அது தவறு செய்யும்படி திருத்த வேண்டும். அதற்கு துணை போகக் கூடாது,’ என காங்கிரஸ் கூறியுள்ளது.

Related Stories: