உக்ரைன் - ரஷ்யா 2-ம் நாள் போர் பதற்றம்..!!!: 800 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தகவல்

கீவ்: ரஷ்ய ராணுவ வீரர்கள் 800 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா இரண்டாவது நாளாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ரஷ்ய வீரர்கள் 800 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்தது. உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று அறிவித்தார். அவரின் அறிவிப்பைத் தொடர்ந்து உக்ரைன் தலைநகர் மீது, மற்ற சில பகுதிகளிலும் ரஷ்யா தாக்குதல் நடத்தியது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனால் ஏராளமான சேதம் ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்தியா இந்த விவகாரத்தில் நடுநிலை வகித்து வருகிறது.

இந்தநிலையில், உக்ரைன் நடத்திய பாதுகாப்பு தாக்குதலில் 800 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், ரஷ்ய ராணுவத்தின் 30 போர் டாங்குகள் அழிக்கப்பட்டதாகவும் , ரஷ்ய விமானப்படையின் 7 விமானங்கள், 6 ஹெலிகாப்டர்களும் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதலை மிக தீவிரமாக தொடர்ந்து இருக்கக்கூடிய நிலையில் பல்வேறு நிலைகளை கைப்பற்றி இருக்கின்றது. உக்ரைனுடைய ராணுவ தளவாடங்கள் மற்றும் விமான நிலையங்கள் அழிக்கப்பட்டது என ரஷ்ய தரப்பில் கூறப்பட்ட நிலையில், தற்போது 800 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.             

Related Stories: