சுயேட்சைகள் இணைந்ததால் திமுக வசமான வந்தவாசி, மணப்பாறை

வந்தவாசி: வந்தவாசி, மணப்பாறை  நகராட்சிகளில் சுயேட்சை வேட்பாளர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இந்த இரு நகராட்சிகளும் திமுக வசமானது. வந்தவாசி நகராட்சி 24வது வார்டுக்கான தேர்தலில் திமுக 8 இடங்களையும், திமுக கூட்டணி முஸ்லிம் லீக் ஒரு இடத்தையும், அதிமுக 3, பாமக 2 சுயேச்சைகள் 10 இடங்களையும் பிடித்தன. திமுகவில் சீட் கிடைக்காததால் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற 3வது வார்டு அன்பரசு, 5வது வார்டு ஜெகரா சித்திக் மற்றும் அதிமுக பிரமுகர்களான சுயேச்சை வேட்பாளர்கள் 4வது வார்டு பீபிஜான்முகமதுஅலி, 12வது வார்டு ரிகானா சையத்அப்துல்கரீம், 21வது வார்டு ஜெயபிரகாஷ் ஆகியோர் நேற்று எம்எல்ஏ அம்பேத்குமார் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதையடுத்து வந்தவாசி நகராட்சி திமுக வசமானது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளது. இதில் திமுக 8, இந்திய கம்யூனிஸ்ட் 2, காங்கிரஸ் 1 இடத்தில் வெற்றி பெற்றது. அதிமுக 11, சுயேச்சை வேட்பாளர்கள் 5 இடங்களில் வெற்றி பெற்றனர்.  

இதில் சுயேச்சை வேட்பாளர்களாக போட்டியிட்டு வென்ற வசந்தா தேவி, விஜயலட்சுமி, ஆயிஷா கனி, பிரான்சிஸ் சேவியர், மணி ஆகிய 5 பேரும் அமைச்சர் கே.என்.நேருவை நேற்றிரவு நேரில் சந்தித்து திமுகவுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இதையடுத்து, மணப்பாறை நகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.

Related Stories: