மன்னார்குடி, நீடாமங்கலத்தில் உள்ள கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிப்பு-உணவு பாதுகாப்பு குழு அதிரடி

மன்னார்குடி : மாநில உணவு பாதுகாப்பு ஆணையர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சவுமியாசுந்தரி தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் முருகேசன், கர்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் மன்னார்குடி மற்றும் நீடாமங்கலத்தில் இயங்கி வரும் குளிர்பான கடைகள், உணவகம் மற்றும் டீக்கடைகள் மற்றும் சாலையோர கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, காலாவதியான குளிர்பானங்கள், தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி குறிப்பிடப்படாத தண்ணீர் பாட்டில்கள், தடை செய்யப்பட்ட செயற்கை நிறம் கொண்ட உணவு பொருட்கள் கைப்பற்றப்பட்டு பாதுகாப்பான முறையில் அழிக்கப்பட்டது. மேலும், 4 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.இது குறித்து, திருவாரூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சவுமியாசுந்தரி கூறுகையில், உணவு விடுதிகள் மற்றும் சாலையோர கடைகளில் சமையல் எண்ணெய்களை மீண்டும் மீண்டும் சூடு படுத்துவதால் குடல் புற்று மற்றும் ஒவ்வாமை நோய் ஏற்படுகிறது. ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மறுமுறை பயன்படுத்தக் கூடாது. எனவே, பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்யை மறுசுழற்சிக்காக பாதுகாப்பான முறையில் சேகரிக்க வேண்டும்.

சாலையோர உணவகங்களில் உணவுப் பொருட்களை திறந்த வெளியில் வைக்காமல் முறையாக மூடி வைத்து விற்பனை செய்ய வேண்டும். பார்சல் செய்யவும் பைகளை பிரிக்க வாயில் எச்சில் தொட்டோ, வாயால் ஊதியோ பிரிக்க கூடாது. பேக்கரி, சுவீட் ஸ்டால் மற்றும் உணவகங்கள் உள்ள உணவுப் பொருட்கள் சுத்தமாக மூடி வைக்கவும், தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதியை தவறாமல் குறிப்பிட வேண்டும்.

குளிர்பானங்கள் தயார் செய்வோர் அழுகிய பழங்களை பயன்படுத்தாமல், தரமான பழங்களை பயன்படுத்தவும், சுத்தமான தண்ணீர் மூலம் சுகாதாரமான முறையில் தயார் செய்ய வேண்டும். கோடைகாலம் தொடங்குவதால் குளிர்பானங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வாங்கும்போது அவற்றில் உணவுப் பாதுகாப்புத்துறை வழங்கிய லைசென்ஸ், தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி, லாட் நம்பர் போன்றவை உள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும். இவ்வாறு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சவுமியா சுந்தரி தெரிவித்தார்.

Related Stories: