கண்ணியம் மீறி தாக்குதலில் ஈடுபட்ட காஞ்சிபுரம் ஏடிஎஸ்பி மீது துறைரீதியான நடவடிக்கை: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின் போது காஞ்சிபுரம் மாநகராட்சி, 12வது வார்டில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் வேட்பாளர் சூரியபாரதியை காஞ்சிபுரம் காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியதோடு, பொய் வழக்கும் புனைந்துள்ளனர். காவல்துறையினரின் இத்தகைய ஜனநாயக விரோத வன்முறை தாக்குதலை மார்க்சிஸ்ட் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. தேர்தல் அதிகாரிகளும், காவல்துறையினரும் அனைத்து கட்சி வேட்பாளர்களிடம் தேர்தல் விதிமுறைகளை விளக்கிக் கொண்டிருந்த போது சந்தேகம் எழுப்பிய சிபிஐஎம் வேட்பாளர் சூரிய பாரதியை காஞ்சிபுரம் நகர ஏ.டி.எஸ்.பி. வினோத் சாந்தாராம் காவல் படையுடன் சூழ்ந்து அவரை கடுமையாக தாக்கியுள்ளார்.

இதை பார்த்த அவரது தாயார் தன் மகனை அடிக்காதீர்கள் என முறையிட்ட போதும் அவரையும் தகாத வார்த்தைகளால் திட்டி கேவலமாக பேசியதுடன் பொய் வழக்கும் புனைந்துள்ளார். அவரது தந்தையும், காஞ்சிபுரம் மாவட்ட சிஐடியு தலைவருமான முத்துக்குமாரை மிரட்டியுள்ளார். காஞ்சிபுரம் ஏ.டி.எஸ்.பி.யின் இந்த நடவடிக்கை மனித உரிமைகளுக்கு எதிரானது மட்டுமல்ல, சட்டத்திற்கும் புறம்பான செயலாகும். எனவே, திட்டமிட்டு உள்நோக்கத்தோடு தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்ட காஞ்சிபுரம் ஏடிஎஸ்பி வினோத் சாந்தாராம் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டுமெனவும், தோழர்கள் எம். சூரியபாரதி, அவரது தாயார் எம்.கன்னிகா, மாணிக்கம், ரவி, பிரேம்குமார், சிவா ஆகியோர் மீது போடப்பட்ட பொய் வழக்குகள் அனைத்தையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

Related Stories: