ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் குரும்பப்பட்டி பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

சேலம் : சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். 2,386 பேர் வந்திருந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் குறைந்ததையடுத்து, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. இதனால், பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு மக்கள் செல்வது அதிகரித்துள்ளது. சேலத்தில் ஏற்காடு மலையடிவாரத்தில் உள்ள குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் வருகை கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. விடுமுறை நாளான நேற்று, காலை முதலே சேலம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதி மக்கள் குடும்பத்தினருடன் வந்திருந்தனர்.

மதியம் 1 மணிக்கு கூட்டம் அலைமோதியது. பூங்காவின் நுழைவாயிலில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சானிடைசர் கொண்டு கை, கால்களை சுத்தம் செய்த பின்னரே பொதுமக்களை வனத்துறையினர் உள்ளே அனுமதித்தனர். பூங்காவினுள் புள்ளிமான், கடமான், முதலை, வெள்ளை மயில், வண்ணப்பறவைகள் உள்ளிட்ட விலங்குகளை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

 விலங்குகளின் உருவங்கள் பொறிக்கப்பட்ட சேர்கள், கல்தூண்கள், 3டி வரைபடங்கள் முன்பு நின்று சுற்றுலா பயணிகள் செல்போன்களில் புகைப்படங்கள் எடுத்து கொண்டனர். 1,980 பெரியவர்களும், 406 சிறுவர்களும் என மொத்தம் 2,386 பேர் வந்திருந்தனர். கடந்த புத்தாண்டு நாளில் தான், 2 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பூங்காவிற்கு வந்தனர். அதன்பின், அதிகபடியாக நேற்றைய தினம் மக்கள் வந்திருந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: