75வது சுதந்திர தின நிறைவு விழா கொண்டாட்டம்!: விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற கடற்படை அணி வகுப்பை நேரில் பார்வையிட்டார் குடியரசு தலைவர்..!!

ஆந்திரா: இந்தியாவின் 75வது சுதந்திர தின நிறைவு விழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக நடைபெற்ற கடற்படையின் சாகச நிகழ்ச்சிகளை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நேரில் பார்வையிட்டார். குடியரசு தலைவர் மூன்று நாள் பயணமாக விசாகப்பட்டினம் சென்றிருக்கிறார். இன்று இந்தியாவின் 75வது சுதந்திர தின நிறைவு விழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக கடற்படையின் சாகச நிகழ்ச்சிகள் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதனை கடலோர காவல்படை கண்காணிப்பு கப்பலான ஐஎன்எஸ் சுமித்ரா கப்பலில் சென்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நேரில் ஆய்வு செய்தார்.

கிழக்கு கடற்படை கட்டளையின் 12-வது அணிவகுப்பில் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையின் 60க்கும் மேற்பட்ட போர் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் பங்கேற்றன. மேலும் இந்நிகழ்ச்சியில் சுமார் 50 போர் விமானங்கள், வானில் பறந்து சாகசங்களை நிகழ்த்தின. சுமார் பத்தாயிரம் கடற்படை வீரர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சியும் நடைபெற்றது. வங்கக்கடலில் இந்தியாவின் அதிநவீன போர்க்கப்பல்கள், விசைப்படகுகள் அணிவகுப்பு நடைபெற்றது.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, ஆளுநர் ஹரிசரன் மற்றும் கடற்படை அதிகாரிகள் பங்கேற்றனர். முன்னதாக நிகழ்வில் பங்கேற்க சென்ற  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி விமான நிலையத்தில் வரவேற்றார்.

Related Stories: