ஆஸி. கடற்படை விமானத்தை சுட்டு வீழ்த்த குறி வைத்த சீனா: தென் சீன கடல் பகுதியில் பதற்றம்

பிரிஸ்பேன்: தென் சீன கடல் பகுதி முழுவதும் தனக்கு சொந்தமானது என்று சீனா கூறி வருகிறது. இதனால், மற்ற நாடுகளின் கப்பல்கள், போர்க் கப்பல்கள் இந்த எல்லைக்குள் வருவதை அது தடை செய்து வருகிறது. மீறி வரும் கப்பல்களை தனது போர்க்கப்பல்கள் மூலம் அச்சுறுத்தி வருகிறது. இதற்கு சவால் விடும் வகையில், அமெரிக்கா அடிக்கடி தனது விமானம் தாங்கி கப்பல்கள், போர்க்கப்பல்களை இந்த கடல் பகுதிக்கு அனுப்பி, சீனாவை சீண்டி வருகிறது.இந்நிலையில், அமெரிக்காவின்  நட்பு நாடான ஆஸ்திரேலியா, தென் சீன கடல் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்ட  தனது நாட்டு கடற்படை விமானத்தை சுட்டு வீழ்த்த, சீன போர்க்கப்பல் மின்காந்த அலை ஒளிக்கற்றை (லேசர்) மூலம் குறி வைத்ததாக குற்றம்சாட்டி உள்ளது. டோரஸ் ஜலசந்தியில் கடந்த வியாழக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. லேசரை வீசிய போர்க்கப்பல் உட்பட 2 சீன போர்க்கப்பல்கள் தற்போது ஆஸ்திரலேியாவின் கிழக்கே  பவளக் கடல் பகுதியில் முகாமிட்டுள்ளன.

இதுபோல், லேசர் மூலம் குறிவைப்பது விமானத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும், சில நேரங்களில் விமானிகளின் பார்வையும் பறிபோய் விபத்து ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. சீனாவின் இந்த செயலுக்கு அமெரிக்காவும், ஆஸ்திரேலியாவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அமெரிக்க கண்காணிப்பு விமானங்கள், ஹெலிகாப்டர்களின் மீதும் ஏற்கனவே பலமுறை சீனா இதுபோல் லேசர் ஒளிக்கற்றையை வீசி அச்சுறுத்தி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: