விருத்தாசலத்தில் இன்று அதிகாலை விருத்தகிரீஸ்வரர் கோயில் தெப்பல் உற்சவம்: 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்திபெற்ற விருத்தகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. 1008 சிவத்தலங்களில் முக்கிய 4 தலங்களில் விருத்தகிரீஸ்வரர் கோயிலும் ஒன்றாக விளங்குகிறது. காசியை விட வீசம் அதிகம் விருத்தகாசி என்ற பழமொழி சிறப்பினை கொண்டுள்ள இக்கோயிலில், சிவபெருமான் முதன் முதலில் இங்குதான் மலைவடிவில் காட்சியளித்தார் எனவும், பல கோயில்களில் கிடைக்கும் வரங்களை இந்த ஒரே கோயிலில் பெறலாம் என்பதும், ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு சிறப்புகள் இருப்பது போல் இக்கோயிலில் உள்ள சிவனை வழிப்பட்டால் முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.

இக்கோயிலில் 5 கோபுரங்கள், 5 நந்திகள், 5 பிரகாரங்கள், 5 தீர்த்தங்கள், 5 தேர்கள், என அனைத்தும் ஐந்தால் ஆன சிறப்பம்சத்தை கொண்ட கோயிலாக அமைந்துள்ளது. இதனால் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலிருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தினமும் இக்கோயிலுக்கு வந்து செல்கின்றனர். வருடந்தோறும் நடைபெறும் விழாக்களில் மாசிமக பெருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். 12 நாட்கள் நடைபெறுகின்ற மாசி மகத்திருவிழா இந்தாண்டு கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து தினமும் பஞ்ச மூர்த்திகள் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது. கடந்த 13ம் தேதி 6ம் திருவிழாவாக கோயிலைக் கட்டிய விபசித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரர் காட்சியளித்தல் என்ற ஐதீக திருவிழாவும், விழாவின் சிகர நிகழ்ச்சியாக கடந்த 16ம் தேதி தேர் பவனியும் 17ம் தேதி மாசிமகம் மற்றும் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து பதினோராம் நாள் திருவிழாவான இன்று அதிகாலை தெப்பை உற்சவம் நடைபெற்றது. இதற்காக நேற்று மாலை பஞ்சமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, இரவு புஷ்ப விமானத்தில் சுப்பிரமணியர், வள்ளி தெய்வானை வீதியுலா வந்து புதுப்பேட்டையில் அமைந்துள்ள அம்மன் திருக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் தெப்பல் உற்சவம் நடைபெற்றது.

தெப்பல் உற்சவத்தை காண நேற்று இரவே ஏராளமான மக்கள் விருத்தாசலத்திற்கு வந்து தங்கினர். அதிகாலையில் நடந்த தெப்பை உற்சவத்தின்போது பக்தர்கள் அனைவரும் பக்தி கோஷங்கள் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று சண்டிகேஸ்வரர் உற்சவமும், 20ம் தேதி முதல் மார்ச் 1ம் தேதி வரை விடையாற்றி உற்சவமும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரன், செயல் அலுவலர் முத்துராஜா மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்ததால் பக்தர்களின் கூட்டத்தை சமாளிக்க விருத்தாசலம் ஏஎஸ்பி அங்கிட் ஜெயின், தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் விஜயரங்கன் (விருத்தாசலம்), விஜயகுமார் (மங்கலம்பேட்டை)  தலைமையிலான போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தொடர்ந்து 12ம் நாளான இன்று சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் மாசி மக திருவிழா நிறைவடைகிறது.

Related Stories: