ஒன்றிய அரசிடமிருந்து தமிழகத்தை காப்பாற்றும் வலிமை முதல்வர் ஸ்டாலினுக்குத்தான் உண்டு: ஈரோட்டில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

ஈரோடு: ஒன்றிய அரசிடமிருந்த தமிழகத்தை காப்பாற்றும் சக்தியும், வலிமையும் பெற்ற ஒரே முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று ஈரோட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார். ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட அக்ரஹார வீதியில் உள்ள அரசு பள்ளியில் இன்று காலை தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வாக்கு பதிவு தொடங்கியதில் இருந்தே வாக்காளர்கள் மிகவும் ஆர்வமாக வந்து வாக்களித்து வருகின்றனர்.

இந்த தேர்தலில திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் மாபெரும் வெற்றியை பெறுவார்கள். இந்த தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறுவதன் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலினின் கரங்களை வலுப்படுத்த முடியும் என்று தமிழக மக்கள் கருதுகிறார்கள். குறிப்பாக தமிழகத்தை வஞ்சித்து வரும் ஒன்றிய அரசிடமிருந்து தமிழகத்தை காப்பாற்றும் சக்தியும், வலிமையும் பெற்ற ஒரே முதல்வர் மு.க.ஸ்டாலின் என்ற முறையில் அவருக்கு ஆதரவாக வாக்காளர்களின் மனநிலை உள்ளது.

தமிழகத்தின் மாண்பு, சுயமரியாதை, சமூக நீதி, கலாசாரம், மொழி காப்பாற்றப்பட வேண்டும் என்றால் ஸ்டாலினின் கரங்களை வலுப்படுத்த வேண்டும். திமுக பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக கூறிவரும் எடப்பாடி பழனிசாமியே பொய்யான நபர் தான். அவர் பொய்யை தவிர வேறு எதுவும் பேச மாட்டார். கண்டிப்பாக கொடநாடு, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி சிறைக்கு சென்று கம்பி எண்ணுவது உறுதியாகி விட்டதால் இது போல் எதையாவதை பேசி வருகிறார்.

பாஜ அதிமுகவோடு இருந்த போது டெபாசிட் வாங்கியது. தற்போது கூட்டணியில் இல்லாததால் தமிழகத்தில் டெபாசிட் வாங்க முடியாது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை வேறு வழக்குகளில் போலீஸ் எப்போதோ தூக்கி இருக்க வேண்டும். ஆனால் நேற்று தான் அதுவும் மென்மையாக போலீஸ் அழைத்து சென்றுள்ளனர். இவ்வாறு இளங்கோவன் கூறினார்.

Related Stories: