பிரசாரத்துக்கும் யாரும் வரல.. பிரியாணி வாங்க காசும் தரல..: காரைக்குடி அதிமுக வேட்பாளர்கள் கவலையிது

காரைக்குடி: காரைக்குடி நகராட்சியில் பிரசாரம் செய்ய நட்சத்திர பேச்சாளர்கள் வராத நிலையில், பூத்தில் பணியாற்றுபவர்களுக்கு பிரியாணி பொட்டலம் வாங்கக் கூட காசு தரவில்லை என அதிமுக வேட்பாளர்கள் புலம்புகின்றனர்.சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சியின் 36 வார்டு உறுப்பினர் பதவிக்கு 231 பேர் போட்டியிடுகின்றனர். இதில் திமுக 26, காங்கிரஸ் 9, கம்யூனிஸ்ட் 1, அதிமுக 32, பாஜ 13 இடங்கள் போட்டியிடுகின்றன. திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், முன்னாள் அமைச்சர் தென்னவன் மற்றும் நட்சத்திர பேச்சாளர்கள் பிரசாரம் செய்தனர். ஆனால் அதிமுக வேட்பாளர்களுக்கு நட்சத்திர பேச்சாளர்கள் யாரும் பிரசாரம் செய்ய கூட வரவில்லை. கட்சியின் சார்பில் பணம் வழங்கப்படும் என வேட்பாளர்கள் எதிர்பார்த்த நிலையில், அதற்கும் கைவிரித்ததால் பிரசாரத்தில் தீவிரம் காட்டாமல் சுணக்கமான நிலையே தொடர்ந்தது.

 கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் அவலத்தை இன்னும் மக்கள் மறக்காத நிலையே தொடர்வது, தவிர சீட் கிடைக்காத பலர் உள்ளடி வேலை பார்த்ததும் அதிமுக வேட்பாளர்களுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிமுக வேட்பாளர்கள் சிலர் கூறுகையில் ‘‘‘‘காரைக்குடி நகராட்சி தேர்தல் பிரசாரத்தில் வாக்கு கேட்டு உடன் வருபவர்களுக்கு கூட செலவு  செய்ய முடியாத நிலைக்கு பல வேட்பாளர்கள் தள்ளப்பட்டனர். இதனால் வேட்பாளர்களுடன் பிரசாரத்திற்கு குறைவானவர்களே வந்தனர். மேலும், நட்சத்திர பேச்சாளர்களும் வராததில் பிரசாரத்தில் தொய்வு ஏற்பட்டது. பிரசாரத்திற்கு வந்தவர்கள், தேர்தல் பணியை பார்த்தவர்களுக்கு பிரியாணி பொட்டலம் வாங்கி தர கூட காசு தரவில்லை’’ என்றனர்.

Related Stories: