ரூ..5,000 கோடி செலவில் சித்தூர் - தஞ்சாவூர் இடையே விரைவு தேசிய நெடுஞ்சாலை பணிகள்: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி

ஹைதராபாத் : ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ரூ.21,559 கோடி முதலீட்டில், 1,380 கி.மீ. தூரத்திற்கான 51 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அடிக்கல் நாட்டி, தொடங்கிவைத்தார்.இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய கட்கரி, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் ஆந்திராவில் உலகத் தரம்வாய்ந்த உள்கட்டமைப்பை நிர்மாணிக்க உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும்  கடலோரப் பகுதியில் சாலை இணைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளதால் சுற்றுலா மேம்பாடு அடைவதுடன், கிராமப்புற மற்றும் நகர்ப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் ஆந்திர மக்களுக்கு முன்னேற்றத்தை கொண்டுவருவதில் இது முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர் கூறினார்.சேது பாரதம் திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள மேம்பாலங்கள் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைப்பதுடன், வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் என்று அமைச்சர் தெரிவித்தார். இதன் மூலம் நேரமும், எரிபொருளும் மிச்சப்படுவதுடன், மாசும் வெகுவாக குறையும் என்று அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஆந்திராவின் விசாகப்பட்டினம் மற்றும் காக்கிநாடா துறைமுகங்களுக்கிடையிலான  நான்கு வழிச்சாலை, சரக்குப் போக்குவரத்தை பெருமளவுக்கு முன்னேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கும் பென்ஸ் சுற்றுவட்ட மேம்பாலம், விஜயவாடா நகரத்தின் போக்குவரத்து நெரிசல் குறைய உதவும்.ஆந்திராவில் 3 பசுமை சாலை திட்டம் அமல்படுத்தப்படும். 2024-ம்ஆண்டுக்குள் ராய்பூர்-விசாகப்பட்டினம் பசுமை விரைவு சாலை திட்டம் நிறைவடையும்.நாக்பூர் - விஜயவாடா, சென்னை- பெங்களூரு விரைவு பசுமை சாலை திட்ட பணிகள் அமல் படுத்தப்படும். ரூ.5,000 கோடி செலவில், ஆந்திர மாநிலம் சித்தூர் - தமிழகத்தின் தஞ்சாவூர் இடையே விரைவு சாலை திட்டப்பணிகள் விரைவில் நிறைவு செய்யப்படும்,இவ்வாறு கட்கரி கூறினார்.

Related Stories: