இந்தியா, இலங்கை இரு நாட்டு பக்தர்களும் கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க அனுமதியில்லை

ராமேஸ்வரம்: கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க இந்திய, இலங்கை இரு நாட்டு பக்தர்களுக்கும் அனுமதி இல்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையே பாக் ஜலசந்தி கடலில் அமைந்துள்ள கச்சத்தீவில் ஆண்டுதோறும் அந்தோணியார் ஆலய திருவிழா விசேஷமாக நடைபெறும். இதில் தமிழகம் மற்றும் இலங்கையை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்பார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக தமிழகத்திலிருந்து பக்தர்கள் செல்வதற்கு அனுமதிக்கவில்லை.

இந்த ஆண்டு மார்ச் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழா நடைபெறவுள்ளது. இதற்கான ஆயத்த பணிகளில் இலங்கை அரசு மற்றும் யாழ்ப்பாணம் மறைமாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வந்தது. திருவிழாவில், இந்திய பக்தர்களுக்கு அனுமதியில்லை என அறிவிப்பு வந்தது. இதையடுத்து, இதில் பங்கேற்க தமிழக பக்தர்களுக்கும் அனுமதி பெற்றுத்தர தமிழக மற்றும் ஒன்றிய அரசுகள் நடவடிக்கை எடுக்க பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க இந்திய - இலங்கையை சேர்ந்த இரு நாட்டு பக்தர்களுக்கும் அனுமதி இல்லை. இத்திருவிழா யாழ்ப்பாணம் மறைமாவட்ட பாதிரியார்களின் பங்களிப்புடன் மட்டுமே நடைபெறும் என இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

Related Stories: