இயல்பான பிரசவத்திற்கு கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி: அரசு சித்த மருத்துவர் அசத்தல்

கம்பம்: கேகேபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு எளிய பிரசவத்திற்கான யோகா மற்றும் திருமூலா பிராணயாம பயிற்சி வழங்கப்பட்டது. கேகேபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுற்றுக்கிராமங்களில் இருந்து ஏராளமான கர்ப்பிணி பெண்கள் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு எளிய, இயல்பான பிரசவத்திற்காக பல்வேறு உடற்பயிற்சி முறைகளும் யோகாசனப் பயிற்சிகளும் கற்றுத்தரப்படுகிறது.

இதில், கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவத்தை சுலபமாக்கும் உட்கடாசனம், வீரபத்ர ஆசனம், பத்மாசனம், தித்திலி ஆசனம், மர்ஜரி ஆசனம், அர்த்தசக்ராசனம் போன்ற யோகா பயிற்சிகளை சித்தமருத்தவ அலுவலர் டாக்டர் சிராஜ்தீன் கற்றுக்கொடுத்தார். நாராயணத்தேவன் பட்டி, சுருளிப்பட்டி, கருநாக்க முத்தன்பட்டி, பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான கர்ப்பிணி பெண்கள் பங்கேற்றனர். மருத்துவ அலுவலர் யோகபிரகதீஷ் மற்றும் செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து டாக்டர் சிராஜ்தீன் கூறுகையில், யோகா பயிற்சியினால் உடல் ஹார்மோன்களில் மாற்றங்கள் ஏற்படுகிறது. பதட்ட நேரங்களில் சுரக்கும் குளுக்கோ கார்டிகாய்டுகள் சுரப்பை கட்டுப்படுத்துகிறது. மன அமைதியை ஏற்படுத்தும் மெலடோனின், செரடோனின் ஹார்மோன்கள் சுரக்கிறது. கர்ப்பக்காலத்தில் பெண்கள் யோகா செய்வதன் மூலம் ரத்த ஒட்டம் அதிகரிக்கிறது. தசைகள் மற்றும் மூட்டுகளின் வலிமையை அதிகப்படுகிறது. நீர்ப்பிடிமானம் மற்றும் திரவக்கோர்வை பிரச்னைகளையும் தீர்க்கிறது, பொதுவாக கர்ப்பக்காலத்தில் உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயை நெருங்காமல் இருக்க யோகா பயிற்சி செய்து வர வேண்டும். யோகா தொடர்ந்து செய்து வந்தால் மனக்கவலை, மன அழுத்தம் குறையும், என்றார்.

Related Stories: