சென்னை: ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த ஆணையத்தின் சார்பில் சசிகலா, அப்போலோ மருத்துவமனை தரப்பு வழக்கறிஞர்களிடம் தங்களது கருத்துக்களை வரும் 22ம் தேதி எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக விசாரிக்க நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில், 2017ல் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் சார்பில் 157 பேர் வரை விசாரணை நடத்தியது. 95 சதவீதம் விசாரணை முடிந்த நிலையில் அப்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திடம் மட்டுமே விசாரணை நடத்தி விட்டு, தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய ஆணையம் திட்டமிட்டு இருந்தது.
இந்த நிலையில், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு எதிராக அப்போலோ நிர்வாகம் தொடர்ந்த வழக்கில், விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது உச்ச நீதிமன்றம். இதனால், கடந்த 2019 ஏப்ரல் 24ம் தேதிக்கு பிறகு ஆணையம் செயல்படவில்லை. இந்த சூழலில், ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களை ஆய்வு செய்ய நிபுணத்துவம் பெற்ற எய்ம்ஸ் மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைத்து விசாரணையை நடத்துவதற்கு, டிசம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஆறுமுகச்சாமி ஆணையத்துக்கு உதவ மருத்துவர்கள் குழுவை அமைத்து எய்ம்ஸ் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், ஆணையத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், அப்போலோ மருத்துவமனை நிர்வாக வழக்கறிஞர்களுடன் நேற்று காலை 10.30 மணியளவில் நீதிபதி ஆறுமுகசாமி ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் முதன்முறையாக தமிழக அரசின் சார்பில் சட்டத்துறை முதன்மை செயலாளரின் நேர்முக செயலாளர் கலந்து கொண்டார். இந்த ஆலோசனையின் போது, மீண்டும் சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ளலாம் என்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டன. அப்போது, யார், யாருக்கு சம்மன் அனுப்பலாம் என்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில், எய்ம்ஸ் மருத்துவக்குழுவிடம் அளித்த அறிக்கைகளையும், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகளை அளித்தால் மட்டுமே எங்களால் விசாரணையை மேற்கொள்ள முடியும் என்று தெரிவித்தனர். சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தரப்பில், 10 நாட்களில் ஆணையம் விசாரணையை முடிக்க வேண்டும். எங்களுக்கு 2 நாட்கள் மட்டுமே விசாரிக்க நேரம் ஒதுக்கினால் போதும். ஏற்கனவே, 13 பேரை மறு விசாரணை செய்ய வேண்டும் என்று ஆணையத்திடம் கோரிக்கை வைத்திருந்தோம் என்று தங்களது கருத்துக்களை கூறினர். இதற்கு, நீதிபதி ஆறுமுகசாமி, யார், யாரை விசாரிப்பது என்பதை ஆணையம் தான் முடிவு செய்யும். இரண்டு தரப்பும் தெரிவித்த கருத்துக்களை ஆணையத்திடம் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார். சுமார் 1 மணி நேரம் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது.இக்கூட்டத்து பிறகு சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் நிருபர்களிடம் கூறுகையில், எங்களது தரப்பு கருத்துக்களை எழுத்துமூலமாக தரும் படி ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்பேரில், ஆணையத்தில் தெரிவவித்த கருத்துக்கள் அனைத்தையும் வரும் 22ம் தேதி எழுத்துமூலமாக தாக்கல் செய்யவிருக்கிறோம். இதுவரை ஆணையம் சார்பில் அழைக்கப்பட்ட 154 சாட்சிகளில் 114 சாட்சிகளிடம் நான் விசாரித்து விட்டேன். மீதமுள்ள சாட்சிகளிடம் விசாரிக்க வேண்டியுள்ளது. மேலும் 13 பேரிடம் மறு விசாரணை கேட்டிருந்தோம் என்பதை ஆணையத்திடம் தெரிவித்தோம். நான் 2 நாளில் விசாரணையை முடித்து விடுவேன் என்று ஆணையத்திடம் தெரிவித்துள்ளேன். எங்களது தரப்பில், அரசியல் ரீதியாக யாரை அழைக்க வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்து திட்டமிட்டு இருந்தீர்களோ அவர்களிடம் விசாரணை நடத்தி முடித்து விடுங்கள் என்று ஆணையத்திடம் தெரிவித்துள்ளோம். மேலும், அரசியல் ரீதியாகவோ, மருத்துவ ரீதியாகவோ விசாரணையை பிரிக்கக் கூடாது என்று ஆணையத்திடம் கூறியுள்ளோம். யார், யாரை கூடுதலாக விசாரிக்கலாம் என்பதை ஆணையம் தான் முடிவு செய்யும். அவ்வாறு ஆணையம் சார்பில், விசாரணை நடத்தும் பட்சத்தில் நாங்கள் குறுக்கு விசாரணை செய்வோம். நாங்கள், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று பரிந்துரை செய்தோம். ஆனால், ஓ.பன்னீர் செல்வத்தை ஆணையம் தான் விசாரணைக்கு அழைத்தது. 8 முறை அவருக்கு சம்மன் அனுப்பபட்டது. 4 முறை ஓபிஎஸ் வாய்தா வாங்கினார். 2 முறை நான் வாங்கினேன், 2 முறை ஆணையம் சார்பில் வாங்கியது. அவரை அழைப்பதை தீர்மானிக்க வேண்டியது ஆணையம் தான். ஆணையம் சார்பில், யார், யாரை விசாரிக்க போகிறோம் என்று கூறவில்லை. ஆணையம் முடித்த பிறகு தான் நான் விசாரணை மேற்கொள்ளவிருக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.