மராட்டியத்தில் வாட்டர் கேனில் தலையை விட்டு சிக்கிய சிறுத்தைக்குட்டி: பெரும் முயற்சிக்கு பிறகு அகற்றம்

மராட்டியம்: மராட்டியம் மாநிலத்தில் குடிநீர் கேனில் தலையை விட்டு மாட்டிக்கொண்ட சிறுத்தைப் புலிக்குட்டி பெரும் போராட்டத்திற்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை இரவு தானே மாவட்டம் பட்லாப்பூர் வனப்பகுதியில் குடிநீர் கேனில் தலையை விட்டு வெளியே எடுக்க முடியாமல் தவித்த படி இருந்த சிறுத்தைப் புலிக்குட்டியை பார்த்த சிலர் அதனை படம் பிடித்து வனத்துறைக்கு அனுப்பி தகவல் தெரிவித்தனர்.

மனித நடமாட்ட சத்தம் கேட்டதால் வனப்பகுதியில் மறைந்து விட்ட சிறுத்தைக்குடியை வனத்துறையினர், வனவிலங்கு நல அமைப்பினர், கிராம மக்கள் என பலரும் வலைவீசி தேடினர். 48 மணிநேரம் நீடித்த தேடுதல் வேட்டைக்குப் பிறகு, செவ்வாய்க்கிழமை இரவு சிறுத்தைக் குட்டியை அவர்கள் கண்டுபிடித்தனர்.  சிறுத்தைக் குட்டியை பிடித்த போது, அது உடல் சோர்ந்த நிலையில் இருந்தது.

பின்னர் அதற்கு மயக்க மருந்து செலுத்தி பெரும் போராட்டத்திற்கு பிறகு தலையில் இருந்து குடிநீர் கேனை அகற்றினர். 2 நாட்களுக்கு மேலாக உணவு இல்லாமல் மயக்க நிலையில் இருந்த  சிறுத்தைப்புலிக் குட்டியை சஞ்சய் காந்தி தேசிய பூங்காவுக்கு கொண்டு சென்ற வனத்துறையினர், தீவிர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர். 2 நாட்களுக்கு உணவு கொடுத்து  சிறுத்தைப்புலிக் குட்டியின் உடல் தேறிய பிறகு, அதை மீண்டும் வனப்பகுதியில் கொண்டு விட அவர்கள் முடிவு செய்துள்ளனர்.            

Related Stories: