ஆம்பூரில் லோன் வாங்கி தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்து இரவோடு இரவாக காலி செய்த நிதி நிறுவனம்-பொதுமக்கள் முற்றுகையால் பரபரப்பு

ஆம்பூர் : ஆம்பூரில் லோன் வாங்கி தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த நிதி நிறுவனம் இரவோடு இரவாக காலி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டில் ஒரு நிதி நிறுவனம் இயங்கி வந்தது. திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி சத்தியமூர்த்தி காலனியை தலைமையிடமாக கொண்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர், வாணியம்பாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிதி நிறுவனம் துவங்கப்பட்டது. இந்த நிதி நிறுவனம் பெண்கள், ஏழை தொழிலாளர்கள், மகளிர் குழுவினரை அணுகி தங்களுக்கு பல லட்சம் வரை தங்களுக்கு லோன் தருவதாக கூறி உள்ளனர்.

இதில் மயங்கியவர்களை தங்களது அலுவலகத்திற்கு வர சொல்லி அவர்களிடம் ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ், வங்கி கணக்கு அட்டை, போட்டோ 4 மற்றும் மகளிர் குழுவின் விவரங்கள் உள்ளிட்டவைகளை பெற்றுள்ளனர். பின்னர், பதிவு செய்தவர்களுக்கு ₹1 லட்சம் முதல் ₹5 லட்சம் வரை 1.20 சதவீத வட்டியில் தனிநபர் கடன், வியாபார கடன்,  மகளிர் குழு கடன் மற்றும் அடமான கடன் தருவதாக உறுதி அளித்தனர். இதனை நம்பிய பலர் இதற்கான கட்டண தொகையாக ₹1000 முதல் ₹3 ஆயிரம் வரை கட்டி உள்ளனர். அவர்களுக்கு மேனேஜர் சீல் போட்டு பணத்தை பெற்று கொண்டு சலான் கொடுத்துள்ளார்.

200க்கும் மேற்பட்டவர்களிடம் இவர்கள் பணம் வசூலித்துள்ளனர். பலர் தங்களுக்கு லோன் வழங்க கோரி பலமுறை இந்த நிதி நிறுவனத்தை அணுகி உள்ளனர். பிப்.15ம் தேதி பலருக்கு லோன் விழா நடத்தி வழங்க உள்ளோம் என கூறி சமாதானபடுத்தி அங்கிருந்த ஒரு நபர் அனுப்பியுள்ளார். இதை நம்பிய பலர் நேற்று முன்தினம் காலை மீண்டும் அந்த அலுவலகத்திற்கு வந்துள்ளனர். அப்போது, அந்த அலுவலகம் பூட்டப்பட்டு இருப்பதை பொதுமக்கள் கண்டனர். மேலும், இவர்களிடம் தொடர்பில் இருந்த அந்த அலுவலர் ஒருவரின் செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்திருப்பது தெரியவந்தது.

பல லட்ச ரூபாய் லோன் பெற்று தருவதாக கூறி போலி தனியார் நிதி நிறுவனம் நடத்தி மர்மநபர்கள் பணத்தை சுருட்டி சென்றதை அறிந்த பணம் செலுத்தியவர்கள் அந்த அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த உம்ராபாத் போலீஸ் எஸ்ஐ காந்தி தலைமையிலான  போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, புகார் பெற்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: