காங்கிரஸ் மூத்த தலைவர் அஸ்வினி குமார் விலகல்: சோனியாவுக்கு பரபரப்பு கடிதம்

புதுடெல்லி: முன்னாள் ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அஸ்வினி குமார் காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, ஒன்றிய சட்டம் மற்றும் நீதித்துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை உட்பட பல்வேறு துறைகளின் அமைச்சர் பதவியை வகித்தவர் அஸ்வினி குமார். காங்கிரசின் தேசிய செய்தி தொடர்பாளராகவும் இருந்துள்ளார். இந்நிலையில், காங்கிரசில் இருந்து ராஜினாமா செய்வதாக அஸ்வினி குமார் அறிவித்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை கட்சியின் தலைவர் சோனியாகாந்திக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார். இந்த கடிதத்தில், ‘நீண்ட ஆலோசனைக்கு பின், தற்போதைய சூழ்நிலையிலும், எனது கண்ணியத்துக்கு ஏற்ப கட்சியில் இருந்து வெளியேறுவது என முடிவு செய்துள்ளேன். கட்சிக்கு வெளியே பெரிய அளவில் இந்த நாட்டிற்காக சேவை செய்ய முடியும். 46 ஆண்டு கால நீண்ட கட்சி பயணத்தில் இருந்து விலகுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். 5 மாநில சட்டமன்ற தேர்தல் தொடங்கியுள்ள நிலையில் மூத்த தலைவர் ராஜினாமா செய்வது காங்கிரஸ் கட்சியில்  சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: