தடுப்பூசிக்கு எதிரான மக்கள் போராட்டத்தை ஒடுக்க கனடாவில் அவசரநிலை பிரகடனம்: பிரதமர் ட்ரூடோ அதிரடி

ஒட்டாவா: தடுப்பூசி கட்டாய உத்தரவுக்கு எதிரான போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவசரநிலையை பிரகடனப்படுத்தி உள்ளார். கனடா நாட்டின் எல்லையை கடந்து அமெரிக்கா செல்லும் டிரக் ஓட்டுநர்களும், அங்கிருந்து கனடா திரும்புபவர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால், தனிமைப்படுத்தப்படுவார்கள் என கனடா அரசு உத்தரவிட்டது. மேலும் பொது இடங்களிலும் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிரக் ஓட்டுநர்களும், பொதுமக்களும் நடத்திய போராட்டம் நாடு முழுவதும் பரவியது. கடந்த 2 வாரமாக ஒட்டாவா உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் சாலைகளில் டிரக் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி டிரைவர்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நாட்டின் எல்லையிலும் போராட்டம் வலுத்துள்ளதால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் வன்முறை சம்பவங்களும் நடக்கின்றன. எனவே, இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவசரநிலையை பிரகடனப்படுத்தி உள்ளார். இதில் ராணுவம் பயன்படுத்தப்பட மாட்டாது என கூறி உள்ள அவர், தடையை மீறி போராட்டம் செய்பவர்களின் வங்கி கணக்குகளை வங்கிகளே தாமாக முடக்கும் என்றும், அவர்கள வாகன காப்பீடு ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளார். இந்த அவசரநிலை பிரகடனம், கனடாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தந்தை வழியில் மகன்

* கனடாவில் முதல் முறையாக கடந்த 1970ம் ஆண்டு கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

* அப்போது அந்த உத்தரவை பிறப்பித்தவர் ட்ரூடோவின் தந்தையும் அப்போதைய பிரதமருமான பியர் ட்ரூடோ ஆவார்.

* அதன் பிறகு முதல் முறையாக, உள்நாட்டு போராட்டத்தை ஒடுக்குவதற்காக தற்போது அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories: