முழு ஊரடங்கால் பூக்கடைகள் இல்லாததால் சாலையோரம் சம்பங்கி பூக்களை கொட்டி சென்ற விவசாயிகள்

சேலம் :  முழு ஊரடங்கால் பூக்கடைகள் இல்லாததால், விவசாயிகள் சம்பங்கி பூவை சாலையோரம் கொட்டி சென்றனர்.சேலம் மாவட்டத்தில் குண்டுமல்லி, சன்னமல்லி, கனகாம்பரம், சம்பங்கி, சாமந்தி, அரளி, காக்கட்டான் உள்பட பல்வேறு ரக பூக்களை, விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு அறுவடை செய்யப்படும் பூக்களை விவசாயிகள் பறித்து சேலம் வ.உ.சி., பூ மார்க்கெட் மற்றும் சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். கடந்த இரு வாரத்திற்கு முன்பு வ.உ.சி., பூ மார்க்கெட்டில் கொரோனா தொற்று ஏற்பட்டால் பூக்கடைகள் மூடப்பட்டது. முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் அனைத்து பகுதிகளிலும் பூக்கடைகள் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பூக்களை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். சில விவசாயிகள் பூக்களை பறிக்காமல் செடியிலேயே விட்டு விடுகின்றனர். தற்போது அனைத்து பகுதிகளிலும் சம்பங்கி அமோக விளைச்சலை தந்துள்ளது. ஆனால், விற்பனைக்கு பூக்கடைகள் இல்லாததால் தினசரி கிலோ கணக்கில் பூக்கள் அழுகி, அதனை விற்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இதனால் சம்பங்கியை விவசாயிகள் சாலையோரம் கொட்டி செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.  இது குறித்து சேலத்தை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ‘கடந்த இரு வாரத்திற்கு முன்பு ஒரு கிலோ சம்பங்கி ₹120 முதல் ₹160 வரை விற்றது. கொரோனா ஊரடங்கால் விளைந்த பூக்களை விற்க முடியாமல் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தற்போது சம்பங்கி நல்ல விளைச்சல் தந்திருந்தாலும் உரிய விலை கிடைக்கவில்லை. ஒரு கிலோ சம்பங்கி ₹20க்கு கூட கேட்க ஆளில்லை. பறிப்பு கூலிக்கூட விலை கிடைக்காததால், பல விவசாயிகள் பூக்களை சாலையோரம் கொட்டி விட்டு செல்கின்றனர். கடந்த இரு வாரமாக வியாபாரம் இல்லாததால், விவசாயிகளுக்கு பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இன்று முதல் பூக்கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், ஓரளவுக்கு வியாபாரம் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது,’ என்றனர்….

The post முழு ஊரடங்கால் பூக்கடைகள் இல்லாததால் சாலையோரம் சம்பங்கி பூக்களை கொட்டி சென்ற விவசாயிகள் appeared first on Dinakaran.

Related Stories: