திருவேற்காட்டில் கலைநிகழ்ச்சிகள் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம்: முதல்முறை வாக்களிப்போருக்கு பூச்செண்டு கொடுத்து வரவேற்பு

பூந்தமல்லி: நேர்மையுடன் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி திருவேற்காட்டில் வாக்காளர் விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி நடைபெற்றது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில் திருவேற்காட்டில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மூலமாக வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது. திருவேற்காடு சிவன் கோயில் அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மகளிர் மேம்பாட்டு திட்ட உதவி இயக்குநர் சாந்தி, திருவேற்காடு  நகராட்சி ஆணையர் ரமேஷ், பொறியாளர் குமார், சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ், திருவேற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

அப்போது. வாக்களிப்பது ஒவ்வொருவரின் ஜனநாயகக் கடமை என்பதை அனைவரும்  அறிய வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும் வாக்குகளை பரிசுப் பொருட்களுக்கும், ரொக்கத்துக்கு விற்காமல், வாக்களிப்பது நமது உரிமை என்பதை  உணர்ந்து வாக்களிக்க வேண்டும். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வாக்குப்பதிவு தினத்தன்று மக்கள் வாக்குப்பதிவு மையத்துக்குச் சென்றுவாக்களித்து ஜனநாயகத்தை தழைக்கச் செய்ய வேண்டும். 100 சதவீதம் வாக்களிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று வலியுறுத்தப்பட்டது.  

இந்நிகழ்ச்சியில் வாக்காளர் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நகராட்சி பணியாளர்கள் மெகா சைஸ் கோலம் வரைந்தனர். தொடர்ந்து நேர்மையுடன் வாக்களிப்பது குறித்து உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. மேலும், சிலம்பாட்டம், கரகாட்டம், தப்பாட்டம், வாக்காளர் விழிப்புணர்வு கவிதை, துண்டு பிரசுரங்கள், பதாகைகள், பேனர்கள் உள்ளிட்ட பல்வேறு உக்திகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பிரசார வாகனம், சைக்கிள் பேரணி தொடங்கி வைக்கப்பட்டது. முதல் முறையாக வாக்களிக்க செல்லும் இளம் வாக்காளர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பூச்செண்டு கொடுத்து வரவேற்று கவுரவித்தனர். இதில் திருவேற்காடு நகராட்சி பணியாளர்கள், சுகாதாரத்துறையினர், பரப்புரையாளர்கள், களப்பணியாளர்கள், பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: