கொடுங்கையூரில் நீண்டநாள் கோரிக்கையான குப்பை கிடங்கு பிரச்னைக்கு தீர்வு: காங்கிரஸ் வேட்பாளர் டில்லிபாபு உறுதி

பெரம்பூர்: பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட 37வது வார்டில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டில்லிபாபு நேற்று கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகர் முழுவதும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அப்பகுதி மக்கள் கொடுங்கையூர் குப்பை மேடு பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும், என்றனர். அதற்கு பதிலளித்த வேட்பாளர் டில்லிபாபு, ‘‘257.50 ஏக்கர் பரப்பளவில் உள்ள கொடுங்கையூர் குப்பைமேட்டில் 40 ஆண்டுக்கும் மேலாக குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது.

இங்கு தரைமட்டத்திற்கு மேல் பல லட்சம் கன மீட்டர் அளவில் குப்பை இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த இடத்தை பயோ மைனிங் முறையில் மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது குப்பை தரம் பிரிக்கப்பட்டு கட்டிட கழிவுகளிலிருந்து ஆலோ பிளாக் கற்கள் செய்யப்படுகின்றன. மங்காத குப்பை மறுசுழற்சி செய்யப்பட உள்ளது. எனவே, கொடுங்கையூர் குப்பைமேடு பிரச்னைக்கு விரைவில் நல்ல தீர்வு ஏற்படும். அடுத்த 2 ஆண்டுகளில் மாநகராட்சி உதவியோடு வெளிப்புறங்களில் உள்ள அனைத்து குப்பைகளும் அகற்றப்பட்டு, இங்கு மக்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையை ஏற்படுத்தி தருவேன்,’’ என்றார்.

Related Stories: