புரசைவாக்கம் கோயில் குளம் புனரமைக்காமல் மோசடி அதிமுக ஆட்சியில் ரூ.71 லட்சம் நிதி ஸ்வாகா: மாநகராட்சி அதிகாரிகளுக்கு பங்கு; அரசு விசாரிக்க பக்தர்கள் கோரிக்கை

சென்னை: அதிமுக ஆட்சி காலத்தில் புரசைவாக்கம் கங்காதேஸ்வரர் கோயில் குளத்தை புனரமைக்காமலேயே ரூ.71 லட்சம் நிதியை அறநிலையத்துறை, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சுருட்டிக்கொண்டது தற்போது தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. சென்னை புரசைவாக்கம் கங்காதேஸ்வரர் கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தில் கடந்த 2013க்கு முன்பு வரை தெப்பத்திருவிழா நடந்தது. ஆனால், 2013க்கு பிறகு குளம் நீரின்றி வறண்டு கிடக்கிறது எனக்கூறி தெப்பத்திருவிழா நடத்தப்படவில்லை. இதை தொடர்ந்து அந்த கோயில் குளத்தை புனரமைத்து தெப்பத்திருவிழா நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து கோயில் குளத்தில் தண்ணீர் தேங்கும் வகையில் மழைநீர் கால்வாய் அமைக்க சென்னை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.15 லட்சம் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டன. ஆனால், எந்தவொரு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதுதொடர்பாக பக்தர்கள் தரப்பில் புகார் தெரிவித்த நிலையில் அறநிலையத்துறை சார்பில் சென்னை மாநகராட்சியிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அப்போது, சென்னை மாநகராட்சி பொறியாளர்கள் கோயில் குளத்தை பார்வையிட்டனர். கோயில் குளத்தில் வண்டல் மண் தேங்கியிருப்பதால், களிமண் நிரப்பினால் தண்ணீரை தேக்கி வைக்க முடியும் என்று கூறி விட்டு சென்றனர்.

இதை தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில், மீண்டும் கோயில் கரைகளை சமப்படுத்தி, தரைதளம் அமைக்க ரூ.18.20 லட்சம் செலவிட கடந்த 2019ல் ஆணையரிடம் அனுமதி பெறப்பட்டன. தொடர்ந்து, சென்னை மாநகராட்சி சார்பில் தூர்வார ரூ.25 லட்சமும், மீண்டும் மழைநீர் சேகரிப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.13 லட்சமும்  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிதியை கொண்டு கோயில் குளத்தை தூர்வாரியதாகவும், இரண்டாவது முறையாக மழை நீர் கால்வாய் அமைத்ததாகவும் கணக்கு காட்டப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் அந்த நிதியை கோயில் நிர்வாகம் மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சிலர் கூட்டு சேர்ந்து லட்சக்கணக்கில் சுருட்டியதாக தெரிகிறது. இதனால், கோயில் குளத்தில் இன்று வரை தெப்பத்திருவிழா நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், இந்த முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: