சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி பகுதியில் தேமுதிகவினருக்கு ஓரளவு செல்வாக்கு இருந்தது. காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் கடந்த சில தேர்தல்களில் போட்டியிட்ட அக்கட்சியினர் கணிசமான ஓட்டு வாங்கினர். ஆனால் 2014, 2019 மக்களவை தேர்தல் மற்றும் 2016 சட்டமன்ற தேர்தலில் சிவகங்கை மாவட்டத்தில் தேமுதிகவினர் போட்டியிடவில்லை. 2016 தேர்தலுக்கு பிறகு சிவகங்கை மாவட்டத்தில் இக்கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கட்சி உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் திமுக, அதிமுகவிற்கு சென்று விட்டனர். இதனால் மாவட்ட அளவில் உள்ள தற்போதைய நிர்வாகிகள் யார் என்பது கூட கீழ் மட்டத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு தெரியவில்லை.கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின்போது தேமுதிகவினர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர். அதன்பிறகு மீண்டும் மக்களவை தேர்தலின்போது தென்பட்டனர். ஆனால் மற்ற காலங்களில் மக்கள் பிரச்னைகள் குறித்து போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என எதிலும் பங்களிப்பு இல்லாமல் ஒதுங்கி விட்டனர். உள்ளாட்சி தேர்தல்களிலேயே இக்கட்சியினர் அதிகமாக மக்கள் மத்தியில் பிரபலமாகினர். ஏராளமானோர் உள்ளாட்சி பிரதிநிதிகளாக கடந்த தேர்தல்களில் போட்டியிட்டனர். பலர் தேர்வாயினர்.