சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகியவை குடும்ப கட்சிகள்: பா.ஜ.க. பிரச்சார கூட்டத்தில் உ.பி. முதலமைச்சர் விமர்சனம்

லக்னோ: சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் குடும்ப கட்சிகள் எனவும், தங்கள் குடும்ப நலன்களுக்காகவே அவர்கள் கட்சியை நடத்தி வருகின்றனர் என்றும் உத்திரப்பிரதேசம் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். உத்திரப்பிரதேச சட்டப்பேரவைக்கு தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு 11 மாவட்டங்களுக்கு உட்பட்ட 58 தொகுதிகளில் நேற்று நடைபெற்றது. இதனையடுத்து 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு வரும் 14 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் ஷாஜஹான்பூரில் பாஜக சார்பில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பங்கேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தங்கள் குடும்ப நலன்களுக்காகவும், வம்சாவளிக்காகவும் கட்சியை நடத்தி வருகின்றனர் என குற்றம் சாட்டினார். நாம் தேசியத்தை பற்றி பேசினால், அவர்கள் சாதியை பற்றி பேசுகிறார்கள் என்றும், பாஜகவினர் வளர்ச்சியை பற்றி பேசினால், அவர்கள் மதம் மற்றும் கல்லறைகளை பற்றி பேசுகிறார்கள் என விமர்சித்தார். கரும்பைப் பற்றி தாம் பேசினால், அவர்கள் ஜின்னாவை பற்றி பேசுகிறார்கள் என முதல்வர் யோகி ஆதித்யநாத் விமர்சித்தார்.                    

Related Stories: