கந்தசுவாமி கோயிலில் தை கிருத்திகை விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்

திருப்போரூர்: கந்தசுவாமி திருக்கோயிலில் தைக்கிருத்திகை விழா நடைபெற்றது. இதில் இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் தை மாதக் கிருத்திகையை முன்னிட்டு நேற்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கார், பைக், வேன், பஸ் என பல்வேறு வாகனங்களில் குவிந்தனர். மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக பயணம் செய்து வந்தனர்.

தொடர்ந்து, கோயிலை ஒட்டி உள்ள திருக்குளத்தில் நீராடி, மொட்டை அடித்து, ஏராளமான பக்தர்கள் வேல் அலகு தரித்து பால் காவடி, புஷ்ப காவடி, வேல் காவடி எடுத்து மாட வீதிகளில் உலா வந்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.

கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில், சிறப்பு ஏற்பாடுகள் செய்தது. மாமல்லபுரம் டிஎஸ்பி ஜெகதீஸ்வரன், திருப்போரூர் இன்ஸ்பெக்டர் லில்லி, எஸ்ஐ ராஜா ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசாரும், ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நகை பறிப்பு சம்பவங்களை தடுக்கும் வகையில் கோயிலுக்கு வந்த பெண்களுக்கு, தங்களது தங்க நகைகளை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் பாதுகாப்பு வளையம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று காலை 9 மணியளவில் புருஷாமிருக உபதேச உற்சவத்துடன் முருகப்பெருமான் வீதி உலா நடந்தது. அதனை தொடர்ந்து நேற்று இரவு வெள்ளி அன்ன வாகனத்தில் முருகபெருமான் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்னதாக அதிகாலை 5 மணியளவில் தமிழ்நாடு  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கிருத்திகை விழாவில்  குடும்பத்துடன் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதில், அவரது  மனைவி, மகன் மற்றும் குடும்பத்தினர் காவடி எடுத்து மாடவீதிகளில் உலா  வந்தனர்.

Related Stories: