வர்ராரு மாஃபா... வராதே போப்பா...! அதிமுக மாஜி அமைச்சரின் அதிரடி கட்டளை

கடந்த 2011ம் ஆண்டு விருதுநகர் தொகுதி தேமுதிக எம்எல்ஏவாக இருந்தவர் மாஃபா பாண்டியராஜன். அப்போது சட்டமன்ற கூட்டத்தொடர் விவாதத்தில் அவர் பேசிய போது, முதல்வர் ஜெயலலிதா 2 முறை குறுக்கிட்டு விளக்கமளித்தார். இதையடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த், ‘‘`நீங்கள் புள்ளி விவரப்புலியாக இருக்கலாம், அதை சட்டமன்றத்தில் காட்டக்கூடாது’’’ என மாஃபாவை திட்டி தீர்த்தார். அப்போது அதிமுக ஆதரவு எம்எல்ஏவாக இருந்த மாஃபா, பின்னர் அதிமுகவில் ஐக்கியமானார். 2016 சட்டமன்ற தேர்தலில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நெருக்குதல் காரணமாக விருதுநகரில் இடம் கிடைக்காமல் மாஃபா ஆவடி தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சரானார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஓபிஎஸ் பக்கம் சாய்ந்த மாஃபாவால் பெரிய அளவில் கட்சியில் சாதிக்க முடியவில்லை. மாஃபாவை விருதுநகர் மாவட்டத்திற்குள் நுழைய முடியாதபடி ராஜேந்திரபாலாஜி பார்த்துக் கொண்டார்.

ஆவினில் வேலை வாங்கி தருவதாக மோசடி புகார்கள் வந்ததை தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருந்த நேரத்தில், விருதுநகர் மாவட்டத்தில் மீண்டும் மாஃபா தலை காட்டத் துவங்கினார். தற்போது உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் செய்வதாக கூறிக் கொண்டு மாவட்டத்தில் வலம் வருகிறார். மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் ராஜேந்திரபாலாஜியோ, நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் மாஃபா பின்னால் பிரசாரத்தில் பங்கேற்கக் கூடாது என அதிரடி உத்தரவை போட்டுள்ளாராம். இந்நிலையில் 15வது வார்டு அதிமுக கவுன்சிலர் ஜோதிராணிக்கு ஆதரவாக மாஃபா பாண்டியராஜன் பிரசாரத்தை துவக்கினார். ஆனால், பின்னால் 5 பேர் கூட வரவில்லை. இதனால் வந்தவர்கள், போனவர்களிடம் அவர் வாக்கு கேட்டது பரிதாபமாக இருந்தது. அடுத்தடுத்த வார்டுகளிலும் இதே நிலைதான்... விருதுநகர் மாவட்டத்தில் காலுன்ற முயலும்  மாஃபாவின் கனவு பலிக்குமா? பலிக்காதா என அதிமுகவினரே டாஸ் போட்டு பார்க்கின்றனராம்...

Related Stories: