நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு எடுக்கும் முடிவுகளுக்கு துணை நிற்போம்: தலைவர்கள் பேட்டி

சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு எடுக்கும் முடிவுகளுக்கு துணை நிற்போம் என முதல்வர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு கட்சி பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர். நீட் விலக்கு சட்ட மசோதாவை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பியதையடுத்து,  முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் கட்சி தலைவர்கள் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: செல்வபெருந்தகை (காங்கிரஸ்): ஆளுநர் சட்டமுன்வடிவை திருப்பி அனுப்பியதற்கு காங்கிரஸ் சார்பில் கண்டனம் தெரிவித்துள்ளோம். ஆளுநர் திருப்பி அனுப்பியது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. ஆளுநரின் பணி சட்டமன்றத்தில் இயற்றப்பட்டுள்ள சட்டமுன்வடிவை குடியரசுத்தலைவருக்கு அனுப்புவது மட்டுமே. 142 நாளில் கிடப்பில் போட்டு திருப்பி அனுப்பியுள்ளார். ஆளுநர் கூறும் காரணம் வேறு. சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானம் வேறு. இது வரம்பு மீறிய செயல்.

வேல்முருகன்(தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்): நீட்  தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற சட்ட மசோதாவை 142 நாட்கள் கழித்து  ஆளுநர் திருப்பி அனுப்பியதை வன்மையாக கண்டிக்கிறேன். இதற்காக மக்கள் திறள்  போராட்டங்களை நாம் முன்னெடுக்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை  வைத்திருக்கிறேன். அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவெடுத்ததன்படி ஏழை, எளிய  மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு சிறப்பு பேரவை கூட்டத்தொடரை  உடனடியாக கூட்டி மீண்டும் தமிழக ஆளுநருக்கு சட்ட மசோதாவை அனுப்பி வைத்து  அவர் குடியரசு தலைவருக்கு அனுப்பி இந்த சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற  தீர்மானத்தை முதல்வர் எடுத்திருக்கிறார். இதை முழு மனதாக ஆதரித்திருக்கிறோம்.

ஜவாஹிருல்லா(மனித நேய மக்கள் கட்சி தலைவர்): தமிழக மக்களின் விருப்பத்திற்கு மாறாக செயல்படும் ஆளுநர் திருப்பிப்போக வேண்டும் என்று மட்டும் இல்லாமல் ஆளுநர் என்ற பதவியை ஒழிப்பதற்கு முதல்வர் ஒரு இயக்கத்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளோம்.

சிந்தனை செல்வன் (விசிக): சட்டமன்றத்தின் இறையாமையை கேலி கூத்தாக்கியுள்ளது ஆளுநரின் நடவடிக்கை. மசோதாவில் கூடுதல் விளக்கங்கள் தரப்பட வேண்டிய தேவை இல்லை எனக் கருதுகிறோம். அதிமுக இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளது பாஜவின் கருத்தியலை பின்பற்றி செல்கிறதோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அதிமுக நீட் விவகாரத்தில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். சிறப்பு கூட்டம் கூட்ட வேண்டும் என்ற தீர்மானத்தை விசிக வரவேற்றுள்ளது.

ராமச்சந்திரன்(இந்திய கம்யூ. கட்சி) : மக்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்படுகின்ற ஆளுநரின் நடவடிக்கையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். முதல்வர் எடுக்கும் முடிவுகளுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்றும் துணை நிற்கும்.

வெங்கடேசன்(பாமக): நீட் தேர்வு விலக்கு கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளோம். கடந்த 5 ஆண்டுகாலமாக தமிழக மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் தங்களின் இன்னுயிரை போக்கியுள்ளனர். சிறப்பு கூட்டத்தொடர் கூட்டப்படும் என்ற தமிழக அரசின் முடிவை பாமக வரவேற்கிறது. தமிழக அரசு நீட் தேர்வு சம்பந்தமாக எந்த நடவடிக்கை எடுக்கிறதோ அதற்கு பாமக முழு ஆதரவை வழங்குவோம்.

Related Stories: