சிறையில் சொகுசு வசதி செய்து கொடுக்க பப்ஜி மதன் மனைவியிடம் லஞ்சம் கேட்ட உதவி ஜெயிலர் செல்வம் சஸ்பெண்ட்: சமூக வலைதளங்களில் ஆடியோ வெளியானதால் சிறைத்துறை டிஜிபி அதிரடி நடவடிக்கை

சென்னை: மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பப்ஜி மதனுக்கு சொகுசு வசதிகள் செய்து தர ₹3 லட்சம் லஞ்சம் கேட்ட சிறைத்துறை உதவி ஜெயிலர் செல்வத்தை சிறைத்துறை டிஜிபி சுனில் குமார் சிங் அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டு மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக சேலத்தை சேர்ந்த பப்ஜி மதன் மீது புகார் வந்தது. குறிப்பாக ஆன்லைன் விளையாட்டின் போது எதிர் முனையில் விளையாடும் நபர்களை ஆபாசமாக பேசியும் அவர்களை மிரட்டியும் பணம் சம்பாதித்ததாக திருச்சி, சேலம், சென்னை என தமிழகம் முழுவதும் பப்ஜி மதன் மீது பாதிக்கப்பட்டு பணத்தை இழந்தோர் புகார் அளித்தனர்.

அந்த புகாரின்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பப்ஜி மதன் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து  பப்ஜி மதனை, கடந்த ஆண்டு ஜூன் 18ம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி பப்ஜி மதன் தற்போது புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் சிறையில் உள்ள பப்ஜி மதனுக்கு சொகுசு வசதிகள் செய்து தர அவரது மனைவி கிருத்திகா முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. அதற்கு புழல் சிறையில் உதவி ஜெயிலராக உள்ள செல்வம் என்பவர் பப்ஜி மதனுக்கு சொகுசு வசதிகள் செய்து தர ஒப்புகொண்டதாக கூறப்படுகிறது. அதற்காக அவர் ₹3 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே பப்ஜி மதன் மனைவி கிருத்திகா மற்றும் சிறைத்துறை உதவி ஜெயிலர் செல்வம் பேசும் ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கிடையே பப்ஜி மதன் சொகுசு வசதிக்காக ₹3 லட்சத்துக்கான முன் பணமாக ₹25 ஆயிரத்தை முகில் செல்வம் என்பவர் கூகுள்பே மூலம் சிறைத்துறை அதிகாரிக்கு அனுப்பி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் சிறைத்துறை டிஜிபி சுனில் குமார் சிங்கிற்கு தெரியவந்தது. உடனே சமூக வலைத்தளங்களில் பரவி வரும் ஆடியோ குறித்து விசாரணை நடத்த சிறைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி சிறைத்துறை அதிகாரிகள் ஆடியோ குறித்து விசாரணை நடத்தினர். அதில் பப்ஜி மதன் மனைவி கிருத்திகா சிறைத்துறை உதவி ஜெயிலர் செல்வம் என்பவரிடம் பேசியது உறுதியானது. பின்னர் விசாரணை அறிக்கையை சிறைத்துறை அதிகாரிகள் டிஜிபி சுனில் குமார் சிங்கிடம் அளித்தனர்.

அதைதொடர்ந்து சிறை விதிகளை மீறி கைதிக்கு சொகுசு வசதிகள் செய்து தர ₹3 லட்சம் லஞ்சம் கேட்ட சிறைத்துறை உதவி ஜெயிலர் செல்வத்தை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும், உதவி ஜெயிலர் செல்வம் அவரது பணிக்காலத்தில் இதுபோல் கைதிகளுக்கு சொகுசு வசதிகள் செய்து தர பணம்  பெற்றுள்ளாரா. இதற்கு பின்னணியில் சிறை அதிகாரிகள் யாரேனும் உள்ளார்களா என்பது குறித்து விசாரணை நடத்தவும் சிறைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், உதவி ஜெயிலர் செல்வத்திடம் பேசிய கைதி பப்ஜி மதன் மனைவி கிருத்திகாவிடம் விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார். பப்ஜி மதன் சொகுசு வசதிக்காக ₹3 லட்சத்துக்கான முன் பணமாக ₹25 ஆயிரத்தை முகில் செல்வம் என்பவர் கூகுள்பே மூலம் சிறைதுறை அதிகாரிக்கு அனுப்பி இருப்பதாகவும் கூறப்படுகிறது

சிறைத்துறை அதிகாரியிடம் பப்ஜி மதன் மனைவி கிருத்திகா பேசிய ஆடியோ விபரம் வருமாறு:

கிருத்திகா: ஹலோ நான் கிருத்திகா பேசுகிறேன். நான் அமவுன்ட் ரெடி பண்ணிட்டு இருக்கேங்க சேலத்துல.. 2 நாட்கள் டைம் வேண்டும். வியாழக்கிழமை போல கொடுத்துவிடுகிறோம்.

சிறைத்துறை அதிகாரி: ஒகே.. ஓகே.. மதன் சொன்னப்புல. நீங்க ரெடி பண்ணுங்க பாத்துக்கலாம்.

கிருத்திகா: கொஞ்சம் அமவுன்ட் பல்க் என்பதால் ரெடி பண்ணிக்கிட்டு இருக்காங்க. ₹3 லட்சம் என்பதால்...

சிறைத்துறை அதிகாரி: ஒகே மதன் சொன்னாங்க பாத்துக்கலாம்.

கிருத்திகா: கொஞ்சம் கோரன்டைன் காலத்துல பார்த்துக்கோங்க. நான் பணத்தை ரெடி பண்ணதும் உங்களுக்கு கால் பண்றேன்.

சிறைத்துறை அதிகாரி: அங்க தான் இருக்கார். ஒன்றும் பிரச்னை இல்லை. நான் பார்த்து கொள்கிறேன்.. இன்னும் வேக்சின் போடலணும் முந்தாநாள் தான் சொன்னாரு. பார்த்துக்கலாம்.

Related Stories: