முன்னாள் முதல்வர் நாராயணசாமி வீட்டின் முன் பைப் வெடிகுண்டு வைத்த வழக்கில் குற்றவாளிகளுக்கு 7 ஆண்டு சிறை: புதுச்சேரி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

புதுச்சேரி: முன்னாள் முதல்வர் நாராயணசாமி வீட்டின் முன்பு பைப் வெடிகுண்டு வைத்த வழக்கில் குற்றவாளிகள் 5 பேருக்கு 7 ஆண்டு சிறையும், ஒருவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து புதுச்சேரி சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமியின் வீடு எல்லையம்மன் கோயில் தெருவில் உள்ளது. இவர் கடந்த 2014ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் அரசு இருந்தபோது மத்திய இணை அமைச்சராக பதவி வகித்தார். இந்த நிலையில் கடந்த 29-1-2014 அன்று இவரது வீட்டின் முன்பு காருக்கு அடியில் பைப் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) விசாரணை நடத்தி தமிழர் விடுதலை படையை சேர்ந்த திருசெல்வம் என்ற குமார் (36), தங்கராஜ் என்ற தமிழரசன் (38), கவியரசன் என்ற ராஜா (29), காளைலிங்கம் என்ற காளை (37), கார்த்திக் என்ற ஆதி ஜீவா (28), ஜான் மார்ட்டின் என்ற இளந்தனால் (23) ஆகிய 6 பேரை கைது செய்தனர். இவர்களில் திருச்செல்வம் சேலம் சிறையிலும், தங்கராஜ் சென்னை புழல் சிறையிலும், கவியரசன், காளைலிங்கம், ஜான் மார்ட்டின் ஆகியோர் கடலூர் சிறையிலும், கார்த்திக் வேலூர் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

இவ்வழக்கு புதுச்சேரி தலைமை நீதிமன்றம் (என்ஐஏ சிறப்பு நீதிமன்றம்) நடந்து வந்தது. வழக்கில் 54 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு இருதரப்பு வாதமும் நிறைவடைந்தது. வழக்கில் விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டு இருந்த 6 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதையொட்டி புதுச்சேரி நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். துப்பாக்கி ஏந்திய போலீசாரும் நிறுத்தப்பட்டனர். கொரோனா பரவல் காரணமாக விசாரணையை நேரடியாக நடத்தாமல், வீடியோ கான்பரன்சிங் மூலம் தலைமை நீதிபதி செல்வநாதன் நடத்தினார். இதில் குற்றம் சாட்டப்பட்ட திருசெல்வம், கவியரசன், காளைலிங்கம், கார்த்திக், ஜான் மார்ட்டின் ஆகிய 5 பேருக்கும் தலா 7 ஆண்டுகளும், தங்கராஜுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: