மாங்குளம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு சத்துணவு சமைக்கும் போது திடீர் தீ விபத்து

வல்லம் : அரசு பள்ளியில் மதிய சத்துணவு செய்யும் பணியின் போது திடீரென்று ஸ்டவ்வில் குபீரென்று தீப்பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சை அருகே மருங்குளத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1 வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ளது. இங்கு 700க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கொரோனா காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. பின்னர் கொரோனா தளரவுக்கு பின் கடந்த 1ம் தேதி முதல் பள்ளிக்கூடங்கள் வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. நேற்று காலை மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்து வகுப்புகளை கவனித்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் மாணவர்களுக்கு மதிய உணவு சத்துணவு கூடத்தில் தயாராகி கொண்டிருந்தது. இப்பணியில் சமையலர், உதவியாளர் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென சிலிண்டர் டியூப்பில் கசிவு ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் டியூப் குபீரென்று தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் பெரும் பரபரப்பு உருவானது. இதுகுறித்து சமையலர் உடனடியாக பள்ளி தலைமை ஆசிரியரிடம் தகவல் தெரிவித்தார். பள்ளியில் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்த தீ அணைப்பான் கருவியை கொண்டு உடனடியாக தீயை அணைத்தனர். இதனால் தீ மற்ற இடங்களுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது.

இருப்பினும் தகவல் அறிந்து மருங்குளம் பள்ளிக்கு விரைந்து வந்த வந்த தஞ்சை தீயணைப்பு துறையினர் சிலிண்டரை அகற்றி வேறு சிலிண்டர் பொருத்தினர். இதனால் பெருமளவில் தீ விபத்து தடுக்கப்பட்டு உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. பள்ளி இயங்கி கொண்டிருந்த நேரத்தில் இதுபோன்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: