குடியாத்தம் நகராட்சி தேர்தலில் ஒரே வார்டுக்கு 2 வேட்பாளரை அறிவித்த தாமரை கட்சி: கடும் குழப்பம் அதிருப்தி

குடியாத்தம்: குடியாத்தம் நகராட்சி கவுன்சிலர் தேர்தலில், பா.ஜ சார்பில் ஒரே வார்டுக்கு 2 வேட்பாளர்களை கட்சி தலைமை  அறிவித்ததால், தொண்டர்கள்-நிர்வாகிகளிடையே கடும் குழப்பம் மற்றும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28ம் தேதி தொடங்கியது. இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் அதிகளவில் மனுதாக்கல் செய்ய வர உள்ளனர்.

இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி பாஜ சார்பில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் போட்டியிடும் இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. இதில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 11 வார்டுகளுக்கான வேட்பாளர்களும், பேரணாம்பட்டு நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் 2 வார்டுகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். குடியாத்தம் நகராட்சி தேர்தலையொட்டி பா.ஜ சார்பில் போட்டியிடுவதற்கு கட்சி நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்து மனு அளித்திருந்தனர். அதன்படி, கடந்த வாரம் குடியாத்தத்தில் மாவட்ட பார்வையாளர் வெங்கடேசன் நேர்காணல் நடத்தினார். பின்னர் வேட்பாளர் பட்டியல் வெளியானது.

அதில், 21வது வார்டில் சுகன்யா, ரேகா, 25வது வார்டில் சரவணன், சுரேஷ்பாபு ஆகியோர் பெயர் இடம் பெற்றிருந்தது. ஒரே வார்டில் 2 வேட்பாளர்கள் பெயர் இடம் பெற்றிருந்தது குடியாத்தம் பா.ஜ நிர்வாகிகளிடம் கடும் குழப்பத்தை ஏற்படுத்தியது. அதனால், 2 வேட்பாளர்களும் யார் வேட்புமனு தாக்கல் செய்வது என தெரியாமல் இருந்தனர். இந்த களேபரத்துக்கு இடையே, 21வது வார்டில் சுகன்யா, 25வது வார்டில் சரவணன் ஆகியோர் உறுதி செய்யப்பட்டு மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீகாந்த் தலைமையில் குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

Related Stories: