நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு நாளை வேட்புமனு தாக்கல் முடிகிறது; திமுக-அதிமுக போட்டி போட்டு மனு தாக்கல்.! நேற்று வரை 10,153 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நேற்று வரை 10,153 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்ய, நாளை மாலை 5 மணியுடன் முடிவடைகிறது என்பதால் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் இன்று அனைத்து மாவட்டங்களிலும் போட்டி போட்டு மனு தாக்கல் செய்தனர். இதனால் வேட்பு மனு தாக்கல் செய்யும் இடங்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. தமிழகத்தில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதன்படி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் மொத்தம் 12,838 வார்டுகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு கடந்த மாதம் 28ம் தேதி வேட்புமனுத்தாக்கல் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் ஆர்வமுடன் வேட்புமனுத் தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில், நாளை மாலை 5 மணியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது. அந்தவகையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நேற்று வரை 10,153 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நேற்று வரையில் மாநகராட்சி வார்டு உறுப்பினருக்கு 1,672 மனுக்களும், நகராட்சி வார்டு உறுப்பினருக்கு 3017 மனுக்களும், பேரூராட்சி வார்டு உறுப்பினருக்கு 5464 மனுக்களும் பெறப்பட்டுள்ளன. நாளை மறுநாள் வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். 7ம் தேதி வேட்புமனுக்களை திரும்பப்பெறலாம். இதைத்தொடர்ந்து 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 8 முனை போட்டி நிலவுகிறது. தேர்தலில் போட்டியிட திமுக, அதிமுக, பாமக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், பாஜ, நாம்தமிழர் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இதனால் இன்றும், நாளையும் எஞ்சியுள்ள வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

குறிப்பாக, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு பதவிக்கு திமுக, அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், அவர்களும் இன்று காலை முதல் போட்டி போட்டு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.  குறிப்பாக திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் இன்று போட்டி போட்டு மனு தாக்கல் செய்தனர். ஒரே நேரத்தில் 10க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய குவிந்ததால், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டு அவர்களின் வேட்புமனுவை தேர்தல் அதிகாரிகள் வாங்கினர். வேட்புமனு தாக்கல் நாளை மாலை 5 மணியுடன் முடிவடைய உள்ளதால், நாளையும் திமுக, அதிமுக மற்றும் முக்கிய கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர். தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 8 கட்சிகள் களத்தில் உள்ளது.

ஆனாலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக-அதிமுக இடையேதான நேரடி போட்டி நிலவுகிறது. திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக அமைச்சர்களும், முன்னணி தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர். திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதேபோல், அதிமுக சார்பில் களம் காணும் வேட்பாளர்களுக்கு ஓபிஎஸ், எடப்பாடி பிரசாரம் செய்ய உள்ளனர். அதிமுக கூட்டணியில் உள்ள பல கட்சிகள் தற்போது தனித்துப் போட்டியிடுகின்றன. திமுக கூட்டணி மட்டும் ஒன்றாக போட்டியிடுகின்றனர். இதனால் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள், தங்கள் பகுதிகளில் உள்ள முக்கிய விஐபிக்களிடம் ஆசீர்வாதம் வாங்குவது, விஐபிக்களை சந்திப்பது போன்ற வற்றில் ஈடுபட்டு வருகின்றனர். ஓரிரு நாளில் வீடு, வீடாக பிரசாரத்தை தொடங்க உள்ளனர். இதனால் இப்போதே தேர்தல் களத்தில் அனல் வீசத் தொடங்கியுள்ளது.

Related Stories: