நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மாவட்ட ஆட்சியர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் காணொலி வாயிலாக ஆலோசனை

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தி வருகிறார். அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். நகர்ப்புற தேர்தலில் பேரணி, பரப்புரை, பொதுக்கூட்டம் நடத்துவதற்கான நேர கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆலோசனை கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளன. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த சூழலில் தேர்தலில் போட்டியிடும் அனைத்துக் கட்சிகளும் தங்களின் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்டமாக வெளியிட்டு வருகின்றனர். வேட்புமனு தாக்கல் செய்ய நாளை மறுநாள் கடைசி நாளாகும். வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் ஒருசில அரசியல் கட்சியை சேர்ந்த வேட்பாளர்களும் சுயேச்சை வேட்பாளர்களும் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்.

தி.மு.க., அ.தி.மு.க, பா.ஜ.க., காங்கிரஸ், ம.தி.மு.க., தே.மு.தி.க, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மையம் போன்ற அரசியல் கட்சி வேட்பாளர்கள் கடைசி நாளான நாளை மறுநாள் அதிகபட்சமாக வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புகள் உள்ளன. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சமாக தேர்தலில் எவ்வளவு தொகை செலவு செய்ய வேண்டும் என்ற விவரத்தை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி வார்டு கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சமாக தேர்தலில் ரூ.90 ஆயிரம் வரை செலவு செய்யலாம். சென்னை மாநகராட்சி தவிர மற்ற மாநகராட்சி வார்டு கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சமாக ரூ.85 ஆயிரம் வரை செலவு செய்யலாம்.

தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை அந்தஸ்தில் உள்ள நகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சமாக ரூ.85 ஆயிரம் வரை செலவு செய்யலாம். 2-ம் நிலை மற்றும் முதல் நிலை அந்தஸ்தில் உள்ள நகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சமாக ரூ.34 ஆயிரம் வரை செலவு செய்யலாம். 3-ம் நிலை நகராட்சி வார்டு கவுன்சிலர் மற்றும் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சமாக ரூ.17 ஆயிரம் வரை செலவு செய்யலாம் என கூறியுள்ளது.

Related Stories: