தை அமாவாசையையொட்டி திருமூர்த்தி மலையில் 500 மாட்டு வண்டியுடன் குவிந்த பக்தர்கள்

உடுமலை : உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலையில் தை அமாவாசை வழிபாடு நடத்த 500 மாட்டுவண்டிகளில்  பக்தர்கள் குவிந்தனர்.திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலை மீது அமணலிங்கேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்கும் இக்கோயிலுக்கு ஆண்டுதோறும் தை அமாவாசை, ஆடி அமாவாசை, சித்திரை மாத பிறப்பு, சிவராத்திரி மற்றும் பிரதோஷ நாட்களில் சுற்று வட்டார கிராம மக்கள் வந்து வழிபட்டு செல்வது வழக்கம். குறிப்பாக தை அமாவாசை தினத்தில் உடுமலை வாளவாடி, பெதப்பம்பட்டி, சாமுராயபட்டி, குடிமங்கலம், மடத்துக்குளம், ஜல்லிப்பட்டி, தளி, தாராபுரம், பல்லடம், பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் மாட்டு வண்டிகளில் திருமூர்த்திமலை வருவது வழக்கம்.

தைப்பொங்கல் முடிந்து அறுவடை திருநாள் கொண்டாடி மகிழ்ந்த விவசாயிகள் தை அமாவாசை தினத்தில் சிவன், பிரம்மா, விஷ்ணு ஒருங்கே அமைந்த அமணலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜை செய்து வழிபடுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் வழிபாட்டுத்தலங்களில் பக்தர்கள் கூடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இதன் ஒரு பகுதியாக திருமூர்த்தி மலை மீது மாட்டு வண்டிகளில் பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.

இந்தாண்டு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மாட்டு வண்டிகளில் திருமூர்த்தி மலை செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் உடுமலை சுற்றுவட்டார கிராம விவசாயிகள் திருமூர்த்தி மலைக்கு நேற்று (31ம் தேதி) அதிகாலை சாமி கும்பிட சென்றனர். திருமூர்த்தி அணையின் கரையில் வண்டிகளை நிறுத்தி விவசாயிகள் மாடுகளை அணையில் குளிக்க வைத்து, சந்தனம், மாலை அணிவித்ததோடு கோயிலுக்கு சென்று குடும்பத்துடன் வழிபட்டு மகிழ்ந்தனர்.

இதேபோல, அமணலிங்கேஸ்வரர் கோயிலின் அருகே ஓடுகின்ற பாலாற்றின் கரையில் பக்தர்கள் இறந்துபோன முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். 2 ஆண்டுகளுக்கு பிறகு தை அமாவாசை நாளில் திருமூர்த்தி மலையில் பக்தர்கள் கூட்டம் களைகட்டியது. கோயிலை சுற்றி உள்ள ஓட்டல்கள், பேக்கரிகள் மற்றும் மலைவாழ் மக்களால் நடத்தப்படும் சிறு, சிறு கடைகளில் வியாபாரம் விறுவிறுப்பாக இருந்தது.

Related Stories: