ஆழியார்- வால்பாறை ரோட்டில் உணவு தேடி வரும் யானைகள் வனத்துறையினர் கண்காணிப்பு

ஆனைமலை: பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் ரோட்டில், உணவு மற்றும் தண்ணீர் தேடி வரும் யானைகளை, வனத்துறையினர் கண்காணித்து வனத்திற்குள் விரட்டும் பணியை  தீவிரப்படுத்தியுள்ளனர். பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில், கடந்த ஆண்டு ஜூன் முதல் பல மாதமாக தென்மேற்கு பருவமழை இருந்தது. தொடர்ந்து டிசம்பர் மாதம் வரையிலும் அடிக்கடி மழை பெய்ததால்,வனப்பகுதி செழிப்படைந்தது. இதனால்,அங்குள்ள மரங்கள் பச்சை பசேலானது. யானை, வரையாடு,மான் உள்ளிட்ட விலங்குகளுக்கு போதுமான உணவுகள் கிடைக்க பெற்றது.

இருப்பினும், கடந்த சில வாரமாக யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அடர்ந்த வனத்திலிருந்து இரை தேடி இடம் பெயர்வது அதிகரித்துள்ளது.

கடந்த சில நாட்களாக  நவமலை வனப்பகுதியிலிருந்து, யானைகள் கூட்டம்,கூட்டமாக ஆழியார் அணையை நோக்கி தண்ணீர் தேடி வந்துள்ளது. இதில் கடந்த சில நாட்களாக நவமலையிலிருந்து வந்த  ஒற்றை காட்டு யானையானது,  ஆழியார்-வால்பாறை மலைப்பாதையில் வெகுநேரம் நின்று அங்குள்ள மரக்கிளைகளை முறித்து உண்டு பசியாறி சென்றது. ஆழியாரிலிருந்து வால்பாறை செல்லும் மலைப்பாதையில் சாலையோரம் நின்ற ஒற்றை யானையை பார்த்த சுற்றுலாபயணிகள் சிலர், வாகனங்களை நிறுத்தி புகைப்படம் எடுத்ததனர்.இதையறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து,அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இருப்பினும், சுற்றுலா பயணிகள், தங்கள் வாகங்களில் இருந்து இறங்கி ரோட்டோரம் உலா வரும் வனவிலங்குகளை தொந்தரவு செய்துவிடக் கூடாது என்பதற்காக,  ஆங்காங்கே நின்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.இதில் நேற்று முன்தினம் மீண்டும் ஒற்றை யானை, இரை தேடி ஆழியார் ரோட்டில் உலா வந்துள்ளது. அதிலும், சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் அறிவு திருக்கோயில் அருகே உலா வந்ததால், சுற்றுலா பயணிகள் அச்சமடைந்தனர். நேற்று காலையிலும் அந்த யானை ஆழியார் ரோட்டில் மீண்டும் உலா வந்துள்ளது. இதையடுத்து, அந்த யானையை, தனி வாகனத்தில் சென்று காட்டில் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். மீண்டும் யானைகளின் நடமாட்டம் இருப்பதால், கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: